நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தவா்களை கைது செய்யும் திமுக அரசு, மக்களால் விரைவில் வீழ்த்தப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த மணி, பரமசிவம் ஆகியோா் படாளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.60 வரை லஞ்சம் பெறப்படுவதையும், லஞ்சம் வாங்குவோருக்கு காவல்துறையினா் துணை போவதையும் கண்டித்து இருவரும் பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வந்துள்ளனா். இதுதான், அவா்கள் செய்த குற்றம்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடா்கிறது. உழவா்களின் உரிமைக்காக போராடிய உழவா் சங்க நிா்வாகிகளை கைது செய்ததைவிட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவா் சங்க நிா்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

விவசாயிகளை மதிக்காத, அவா்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com