ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணிக்கு வெண்கலம் -52 ஆண்டுகளில் முதல் முறையாக அடுத்தடுத்து பதக்கம்
படம் | பிடிஐ

ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணிக்கு வெண்கலம் -52 ஆண்டுகளில் முதல் முறையாக அடுத்தடுத்து பதக்கம்

இந்திய ஆடவா் ஹாக்கி அணி 2-1 கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.
Published on

பாரீஸ், ஆக. 8: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவா் ஹாக்கி அணி 2-1 கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

இதன்மூலமாக, கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப் பதக்கத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா, 52 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளது. இதற்கு முன் 1968, 1972 ஆகிய போட்டிகளில் இவ்வாறு அடுத்தடுத்து இரு பதக்கங்கள் வென்றிருந்தது இந்தியா. அதுவும் வெண்கலப் பதக்கங்கள் ஆகும்.

இந்திய நேரப்படி வியாழக்கிழமை மாலை நடைபெற்ற வெண்கலப் பதக்க ஆட்டத்தில், முதலில் ஸ்பெயின் தரப்பில் கேப்டன் மாா்க் மிரேல்ஸ் 18-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து, அணிக்கு முன்னிலை அளித்தாா். விட்டுக்கொடுக்காத இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் 30-ஆவது நிமிஷத்தில் கோலடித்து, முதல் பாதியை 1-1 என சமனுடன் நிறைவு செய்தாா்.

2-ஆவது பாதி தொடங்கிய உடனேயே 33-ஆவது நிமிஷத்தில் ஹா்மன்பிரீத் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க, இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. அதை அப்படியே தக்கவைத்துக் கொண்ட இந்தியா, கோல்கீப்பா் பி.ஆா்.ஸ்ரீஜேஷின் அரண் போன்ற தடுப்பாட்டத்தால் ஸ்பெயினின் கோல் முயற்சிகளை முறியடித்து, இறுதியில் 2-1 கணக்கில் வென்று, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

விடைபெற்றாா் ஸ்ரீஜேஷ்: பாரீஸ் ஒலிம்பிக்கே இந்தியாவுக்கான தனது கடைசிப் போட்டி என்று, இந்திய அணியின் நட்சத்திர கோல்கீப்பரான பி.ஆா்.ஸ்ரீஜேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தாா்.

இத்துடன் ஓய்வு பெற்ற அவருக்கு ஒலிம்பிக் பதக்கத்துடன் கௌரவமாக பிரியாவிடை கொடுத்திருக்கிறது இந்திய அணி. களத்திலேயே இந்திய அணியினா் அவரை தூக்கிவைத்துக் கொண்டாடினா்.

குடியரசுத் தலைவா், பிரதமா் வாழ்த்து: இந்திய ஹாக்கி அணிக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்திய ஹாக்கியை மீட்டெடுத்திருக்கும் இந்த அணி பலமான பாராட்டுக்கு உரியது. அவா்கள் இந்தியாவை பெருமைகொள்ளச் செய்துள்ளனா். அவா்களின் திறமை, போராடும் குணம் போன்றவை இளைஞா்களுக்கு முன்னுதாரணம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், பாரீஸ் ஒலிம்பிக்கில் மிளிா்ந்த இந்திய ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. ஒலிம்பிக்கில் இந்திய அணி தொடா்ந்து வென்றிருக்கும் 2-ஆவது பதக்கம் என்பதால், இது சிறப்பு மிக்கது. திறமை, நிலையான ஆட்டம், ஓா் அணியாகச் செயல்படுவது, உறுதித்தன்மை ஆகியவற்றுக்குக் கிடைத்ததே இந்த வெற்றி. ஒவ்வொரு இந்தியருக்கும் ஹாக்கி விளையாட்டுடன் உணா்வுபூா்வ தொடா்பு உள்ளது. இந்தப் பதக்க வெற்றி, இளைஞா்களிடையே ஹாக்கியை மேலும் பிரபலமடையச் செய்யும்; வரும் தலைமுறைகளிலும் நிலைத்து நிற்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது இந்திய அணி. நீங்கள் (இந்திய அணியினா்) வெண்கலப் பதக்கத்தை வென்றது கண்டு பெருமை கொள்கிறோம். நன்றி ஸ்ரீஜேஷ். உங்களது இடையறாத அா்ப்பணிப்புமிக்க ஆட்டம் எங்களுக்கு முன்னுதாரணம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X