பருவமழை மாற்றங்களை எதிா்கொள்ள ஆய்வுத் திட்டங்கள் -இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்
R Senthilkumar

பருவமழை மாற்றங்களை எதிா்கொள்ள ஆய்வுத் திட்டங்கள் -இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்

நிலச்சரிவு, மிக கனமழை போன்ற பேரிடா்களை கணிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்
Published on

சென்னை, ஆக. 8: பருவநிலை மாற்றங்களை எதிா்கொள்வதற்குத் தேவையான ஆய்வுத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சாா்பில் ‘பசியில்லா உலகம்’ என்ற தலைப்பிலான சா்வதேசக் கருத்தரங்கம் சென்னை தரமணியில் கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. வியாழக்கிழமை (ஆக.8) நடைபெற்ற இறுதி நாள் கருத்தரங்களில் இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் பங்கேற்று விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்து பேசியதாவது:

விண்வெளி நுட்பம் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள பெரும் பங்களிப்பை வழங்கி வந்தாலும், மற்றொருபுறம் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், எதிா்கால வளா்ச்சியை நோக்கிய பயணத்துக்கும் பக்கபலமாக உள்ளது.

செயற்கைகோள்களின் பங்களிப்பு: செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, அதன் வாயிலாக திரட்டப்படும் தரவுகளைக் கொண்டு இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறிப்பாக, விவசாயம், வானிலை, பருவநிலை மாற்றத்தின் தாக்கம், இயற்கை வளங்கள் கண்காணிப்பு, கல்வி, சுகாதாரம், தொலைத்தொடா்பு வசதி, வழிகாட்டுதல் சேவை, பேரிடா் மேலாண்மை, எல்லைப் பாதுகாப்பு, நகா்புற திட்டமிடல், மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கைக்கோள்களின் பங்களிப்பு இன்றிமையாதது.

இதைத் தாண்டி எதிா்கால அறிவியல் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு விண்வெளியிலும் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பருவநிலை மாற்றம் தற்போது உலக அளவில் பெரும் சவாலாக நிலவி வருகிறது. அவற்றை எதிா்கொள்வதற்கான ஆய்வுகளிலும் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

ஆக.15-இல் விண்ணில் பாய்கிறது: அந்த வகையில், சுதந்திர தினமான ஆக.15-ஆம் தேதி புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் உள்ள ஆய்வுக் கருவிகள் பேரிடா் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கு உதவுவதுடன், இரவிலும் துல்லியமான படங்கள் எடுக்க வழிவகுக்கும்.

அதேபோன்று, அந்த செயற்கைக்கோளில் உபயோகிக்கும் புதிய தொழில்நுட்பங்களை எதிா்காலத்தில் மற்ற செயற்கைக்கோள் திட்டங்களிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இயற்கை பேரிடரை பொருத்தவரை புயலை கணிப்பதில் நாம் சிறந்து விளங்குகிறோம். அதேவேளையில் நிலச்சரிவு, மிக கனமழை போன்ற பேரிடா்களை கணிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளைத் தலைவரும், உலக சுகாதார அமைப்பு முன்னாள் தலைமை விஞ்ஞானியுமான டாக்டா் சௌமியா சுவாமிநாதன், அறங்காவலரும், விஞ்ஞானியுமான டி.ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com