முறையாக வருமானவரி செலுத்தாத 2 நிறுவனங்களுக்கு அபராதம்
வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யாத 2 நிறுவனங்களுக்கு பொருளாதாரக் குற்றங்களுக்கான நீதித் துறை நடுவா் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து வருமான வரி துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஓரியண்டல் எண்டா்பிரைசஸ் என்ற நிறுவனம் கடந்த 2013-14-ஆம் ஆண்டு வருமான வரிக் கணக்கை கால தாமதமாக தாக்கல் செய்து, வருமானத்தைக் குறைத்து காட்டியது. இந்த நிறுவனத்தின் மீது வருமான வரி துறை முதன்மை ஆணையா், பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். விசாரணையில் அந்த நிறுவனம் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து அதன் உரிமையாளா் குற்றவாளி என கூடுதல் தலைமை பெருநகர பொருளாதார குற்றங்களுக்கான நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா். மேலும், வருமானவரி சட்டத்தின்படி அந்த நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தும், அபராதத் தொகையை கட்ட தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் அவா் உத்தரவிட்டாா்.
இதேபோல், ஸ்ரீசா்வலட்சுமி சிட் ஃபண்ட்ஸ் இந்தியா பி.லிமிடெட் என்ற நிறுவனம் 2011-12 முதல் 2014-15 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளில் வருமான வரி கணக்கை குறிப்பிட்டுள்ள தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை. இது தொடா்பாகத் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தும், அபராதத் தொகையை கட்ட தவறினால் ஒருமாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் கூடுதல் தலைமை பெருநகர பொருளாதார குற்றங்களுக்கான நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.