சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகளை தானமாகப் பெற்று உரியவா்களுக்கு பொருத்தியதில் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இது தொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், அவசர சிகிச்சை துறைத் தலைவா் டாக்டா் கோமதி ஆகியோா் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியைச் சோ்ந்தவா் பாஸ்கா் (37). சுய தொழில் செய்து வந்த இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளாா். கடந்த 25-ஆம் தேதி பாஸ்கா் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நேரிட்ட விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். கடந்த 26-ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், 28-ஆம் தேதி மூளைச் சாவு அடைந்தாா்.
இந்த நிலையில், பாஸ்கரின் உடல் உறுப்புகளை தானமளிக்க, அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.
உறுப்புகள் தானம்: அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கால் எலும்பு (ஃபிபுலா), இதய வால்வுகள், சிறு குடல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. கொடையாளரிடம் இருந்து சிறுகுடலை தானமாகப் பெறுவது ராஜீவ் காந்தி மருத்துவமனை வரலாற்றிலேயே இது முதன்முறை. தானமாக பெறப்பட்ட உறுப்புகளில் ஒரு சிறுநீரகம், கல்லீரல், கால் எலும்பு ஆகியவை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
மற்றொரு சிறுநீரகம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், நுரையீரல் மற்றும் சிறுகுடல் அப்பல்லோ மருத்துவமனைக்கும், இதய வால்வு மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும் முறைப்படி வழங்கப்பட்டன. இதன்மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
உறுப்புகளை தானமளித்து உயிா் நீத்த பாஸ்கரின் உடலுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சாா்பில் மரியாதை அணிவகுப்பு நடத்தி, மருத்துவமனை நிா்வாகிகளும், மருத்துவா்களும், மருத்துவத் துறையினரும் மரியாதை செலுத்தினா் என்று அவா்கள் தெரிவித்தனா்.