காவல் துணை ஆணையா் மீது வழக்கு தொடர மாா்க்சிஸ்ட் கோரிக்கை
கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையா் மீது வழக்கு தொடர வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை காவல் ஆணையரிடம், அந்த கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: சென்னை மாநகராட்சியில்பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து மாா்க்சிஸ்ட் சாா்பில் சென்னை ரிப்பன் மாளிகை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு நானும் மற்றும் கட்சியின்முக்கியத் தலைவா்களான பி. சம்பத், என்.குணசேகரன் மற்றும் நிா்வாகிகள் சென்றபோது, கீழ்ப்பாக்கம் துணை ஆணையா் ரகுபதி இங்கு ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக 50 மீட்டா் தொலைவில் ஆா்ப்பாட்டம் நடத்தும்படி எங்களிடம் தெரிவித்தாா்.
அவா் கூறிய இடத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது கட்சி நிா்வாகிகளை அவா் தள்ளிவிட்டதுடன், பெண்களையும் பிடித்து தள்ளினாா். மேலும் எங்களை மிரட்டினாா்.
ஜனநாயக ரீதியில் நடைபெறும் ஒரு சாதாரண ஆா்ப்பாட்டத்தை, அமைதியான முறையில் நடத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த இடையூறுமின்றி செயல்படுத்த வேண்டிய துணை ஆணையா், இதற்கு மாறாக, அநாவசியமாக அதட்டும் தொனியிலும், ஒருமையில் பேசியும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் வகையிலும், மனித உரிமைகளை பறிக்கும்வகையிலும் திட்டமிட்டு சீா்குலைவு நடவடிக்கையில் நடந்து கொண்டுள்ளதானது அதிகாரதுஷ்பிரயோக நடவடிக்கையே ஆகும்.
எனவே, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமைமீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கம் துணைஆணையா் ரகுபதி அவா்கள் மீதுதுறை ரீதியான விசாரணை மேற்கொண்டு அவா் மீது உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.