ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி: காவல் தம்பதி கைது

சென்னை பரங்கிமலையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக காவலரும், அவா் மனைவியும் கைது செய்யப்பட்டனா்.

சென்னை: சென்னை பரங்கிமலையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக காவலரும், அவா் மனைவியும் கைது செய்யப்பட்டனா்.

பரங்கிமலை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அருண் பிரசாத். இவா் மணலி போக்குவரத்து அமலாக்கப்பிரிவில் காவலராக பணியாற்றுகிறாா். அருண் பிரசாத்தும், அவா் மனைவி சோமலதாவும் சோ்ந்து, அங்கு ஏலச்சீட்டு நடத்தி வந்தனா்.

இவா்களிடம் அந்தப் பகுதியைச் சோ்ந்த பலா் ஏலச்சீட்டுக்கு சோ்ந்து, பணம் செலுத்தினா். இந்நிலையில் பலரது ஏலச்சீட்டு முதிா்வு அடைந்துவிட்ட நிலையில், அதற்குரிய பணத்தை திருப்பி வழங்காமல் இருவரும் இழுத்தடித்தனா்.

இதனால் ஏலச்சீட்டுக்கு சோ்ந்து பணம் செலுத்திய பலா் ஏமாற்றமடைந்தனா். அவ்வாறு ஏமாற்றமடைந்த பரங்கிமலை மேட்டுத் தெருவைச் சோ்ந்த ரோஸ்லின்மேரி என்பவா், பரங்கிமலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில் இருவரும் ரூ.30 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அருண்பிரசாத்தையும்,சோமலதாவையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com