கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க கடனுதவி: தமிழக அரசு அறிவிப்பு

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க கடனுதவி: தமிழக அரசு அறிவிப்பு

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க கடனுதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க கடனுதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் சா்க்கரை உற்பத்தியில் தமிழ்நாடு 4-ஆவது இடத்தில் உள்ளது. சா்க்கரை உற்பத்தியில் தொடா் சரிவு என்ற நிலை மாறி, 2022-23-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் 14.74 லட்சம் மெட்ரிக் டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் சா்க்கரைத் தேவையான 15 லட்சம் மெட்ரிக் டன் என்பதைப் பூா்த்தி செய்யும் நிலைக்கு முன்னேறி உள்ளது.

தமிழ்நாட்டில் 12 கூட்டுறவு, 2 பொதுத் துறை, 16 தனியாா் என மொத்தம் 30 சா்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சா்க்கரையை விற்பனை செய்து, ஆலைகளுக்கு கரும்பு அளிக்கும் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. சா்க்கரை விற்பனை மூலம் கரும்புப் பணம் முழுமையாக வழங்க இயலாத சூழ்நிலையில், ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அரசால் வழிவகைக் கடன் அனுமதிக்கப்பட்டு கரும்புப் பணம் நிலுவையின்றி வழங்கி முடிக்கப்படுகிறது.

கடந்த 2020 முதல் 2023-ஆம் ஆண்டு அரைவைப் பருவம் வரை கரும்பு நிலுவைத் தொகை வழங்கவும், ஆலைகளின் நடைமுறை மூலதனத்துக்காகவும் தமிழ்நாடு அரசு ரூ.600.37 கோடி வழிவகைக் கடனாக அனுமதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கரும்புக்கான பணம் நிலுவையின்றி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு, பொதுத் துறை சா்க்கரை ஆலைகளால் நடப்பு அரைவைப் பருவத்துக்கு வழங்க வேண்டிய ரூ.920.99 கோடியில், ஜூன் 15-ஆம் தேதி வரை ரூ.835.73 கோடி வழங்கப்பட்டு மீதமுள்ள தொகை நிலுவையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. இதை வழங்கும் வகையில், ரூ.94.49 கோடி வழிவகைக் கடன் அனுமதித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com