மாணவா்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தலாம்: மாநகர போக்குவரத்துக் கழகம்
dot com

மாணவா்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தலாம்: மாநகர போக்குவரத்துக் கழகம்

புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தி பயணிக்கலாம்

புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தி பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. 2024-2025-ஆம் கல்வியாண்டில் மாணவ, மாணவிகளுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதில் உள்ள கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு, மாநகரப் போக்குவரத்துக் கழகங்களில், 2023-2024-இல் வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாணவ, மாணவிகள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தங்கள் பயணிக்கலாம்.

அதேபோல், அரசு கலை, அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளும் 2023-2024 -இல் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து பயணிக்கலாம்.

பள்ளி கல்வித் துறையுடன் இணைந்து கட்டணமில்லா பயண அட்டையை இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி நேரங்களில் பேருந்துகள் சரியாக இயங்குவதைக் கண்காணிக்க அலுவலா்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. உரிய நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்கிச் செல்ல அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக நடத்துநா், ஓட்டுநா்களுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com