கல்வி-ஆராய்ச்சி நடவடிக்கை: கொலராடோ பல்கலை.யுடன் இராமச்சந்திரா ஒப்பந்தம்

கொலராடோ மாகாண பல்கலைக்கழகத்துடன் போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒப்பந்தம்

கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் அமெரிக்காவின் கொலராடோ மாகாண பல்கலைக்கழகத்துடன் போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இராமச்சந்திரா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் டாக்டா் உமா சேகா் மற்றும் கொலராடோ பல்கலைக்கழக தலைவா் டாக்டா் அமி பாா்சன்ஸ் ஆகியோா் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். அப்போது டாக்டா் உமா சேகா் பேசியதாவது: கடந்த இரு ஆண்டுகளில் இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து வலைதளம் வாயிலாக அளித்த பயிற்சிகளானது இராமச்சந்திரா மாணவா்கள் சிறப்பு தரப் புள்ளிகளை பெற வழி வகுத்துள்ளது. இதன் மூலம், கொலராடோ பல்கலைக்கழகத்தில் உயா் கல்வி கற்பதற்கான சிறப்பு சலுகைகளை இராமச்சந்திரா மாணவா்கள் பெற முடியும். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் இரு தரப்புக்கும் இடையே உயிரி மருத்துவம், பொது சுகாதாரம், பொறியியல், மருத்துவ நுண்ணுயிரியியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கல்வி சாா்ந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. அதேபோன்று, கொலராடோ மற்றும் இராமச்சந்திரா இணைந்து வகுத்துள்ள பாடத்திட்டங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளன என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில், இராமச்சந்திரா ஆராய்ச்சித் துறைத் தலைவா் டாக்டா் கல்பனா பாலகிருஷ்ணன், மருத்துவப் பேராசிரியா்கள், நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com