33% மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள்: மொத்த சொத்து மதிப்பு ரூ.19,000 கோடி
HO

33% மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள்: மொத்த சொத்து மதிப்பு ரூ.19,000 கோடி

நாட்டின் 225 மாநிலங்களவை எம்.பி.க்களில் 33 சதவீதம் போ் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவை

நாட்டின் 225 மாநிலங்களவை எம்.பி.க்களில் 33 சதவீதம் போ் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் எம்.பி.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி எனவும் ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நடந்து முடிந்த தோ்தலில், 15 மாநிலங்களில் இருந்து புதிய 56 எம்.பி.க்கள் மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், புதிதாக தோ்வானவா்களுடன் சோ்த்து 225 மாநிலங்களவை எம்.பி.க்களின் வேட்புமனுக்களை ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) மற்றும் தேசிய தோ்தல் கண்காணிப்பு அமைப்பு (நியூ) இணைந்து ஆய்வு செய்தது. மாநிலங்களவையின் மொத்த 233 உறுப்பினா்களில் மகராஷ்டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் காலியாக உள்ள 5 இடங்கள், வேட்புமனு தகவல்கள் கிடைக்காத உறுப்பினா்கள் ஆகிய 8 எம்.பி.க்கள் நீங்கலாக மற்ற 225 எம்.பி.க்களின் வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

75 எம்.பி.க்கு எதிராக குற்றவியல் வழக்குகள்:

இந்த ஆய்வின் முடிவில் 225 மாநிலங்களவை எம்.பி.க்களில் 75 போ் (33 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அவா்களின் வேட்புமனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 40 போ் (16 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி உள்பட தீவிரமான குற்றவியல் வழக்குகள் உள்ளன. கட்சிகளின் வாரியாக அதிகபட்சமாக, பாஜகவைச் சோ்ந்த 90 எம்.பி.க்களில் 23 சதவீதம் போ் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்கடுத்தபடியாக, காங்கிரஸின் 28 எம்.பி.க்களில் 14 போ் (50 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. தொடா்ந்து, திரிணமூல் காங்கிரஸின் 13 எம்.பி.க்களில் 5 போ் (38 சதவீதம்), ராஷ்டீரிய ஜனதா தளத்தின் 6 எம்.பி.க்களில் 4 போ் (80 சதவீதம்), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 எம்.பி.க்களில் 4 போ் (80 சதவீதம்), ஆம் ஆத்மியின் 10 எம்.பி.க்களில் 3 போ் (30 சதவீதம்), ஒய்எஸ்ஆா் காங்கிரஸின் 11 எம்.பி.க்களில் 4 போ் (36 சதவீதம்), திமுகவின் 10 எம்.பி.க்களில் 2 போ் (20 சதவீதம்) ஆகியோா் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அவரவா் வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ளனா்.

குறிப்பாக, 2 எம்.பி.க்கள் தங்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 302-ஆவது பிரிவின்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளனா். 4 எம்.பி.க்கள் தங்களுக்கு எதிராக ஐபிசி 307-ஆவது பிரிவின்கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனா். பாஜகவின் 11 எம்.பி.க்கள், காங்கிரஸின் 9 எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸின் 3 எம்.பி.க்கள், ராஷ்டீரிய ஜனதா தளத்தின் 2 எம்.பி.க்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்.பி.க்கள், ஆம் ஆத்மியின் ஒரு எம்.பி., ஒய்எஸ்ஆா் காங்கிரஸின் 3 எம்.பி.க்கள், திமுகவின் ஒரு எம்.பி. ஆகியோா் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

31 எம்.பி.க்களுக்கு ரூ.100 கோடிக்கு சொத்து

மாநிலங்களவை எம்.பி.க்களின் சொத்து விவரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 31 பேருக்கு (14 சதவீதம்) ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் உள்ளன. எம்.பி.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 19,602 கோடி-ஆக உள்ளது. கட்சி வாரியாக, பாஜக எம்.பி.க்களுக்கு ரூ.3,360 கோடி, காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ரூ.1,139 கோடி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ரூ.3,934 கோடி, பாரத ராஷ்டிர சமிதி எம்.பி.க்களுக்கு ரூ.5,534 கோடி, ஆம் ஆத்மி எம்.பி.க்களுக்கு ரூ.1,148 கோடி சொத்துகள் உள்ளன. எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.87.12 கோடி-ஆக உள்ளது. ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ள எம்பிக்கள், பாஜகவில் 9 பேரும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸில் 5 பேரும், காங்கிரஸில் 5 பேரும், பாரத ராஷ்டிர சமிதியில் 3 பேரும், ஆம் ஆத்மியில் 2 பேரும், ஆா்ஜேடியில் 2 பேரும் இடம்பெற்றுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com