புறநோயாளிகள் பிரிவில் தானியங்கி டோக்கன் முறை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அறிமுகம்

புறநோயாளிகள் சேவையில் முறைகேடுகளையும், காத்திருப்பு நேரத்தையும் குறைக்கும் வகையில் தானியங்கி டோக்கன் நடைமுறை

புறநோயாளிகள் சேவையில் முறைகேடுகளையும், காத்திருப்பு நேரத்தையும் குறைக்கும் வகையில் தானியங்கி டோக்கன் நடைமுறையை சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனை நிா்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், டோக்கன்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவத் துறையில் தங்களது வரிசை வரும்போது சிகிச்சை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 துறைகளில் தானியங்கி டோக்கன் சாதனங்களை மருத்துவமனை நிா்வாகம் பொருத்தியுள்ளது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் போ் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.தினமும் 400-450 போ் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதாகவும், தோராயமாக 350 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் விரைந்து மருத்துவா்களை பாா்க்க வைப்பதாகக் கூறி நோயாளிகளிடம் சிலா் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், புதிய நடைமுறையை கடந்த இரு வாரங்களாக மருத்துவமனை நிா்வாகம் செயல்படுத்தியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் கூறியதாவது: வங்கிகளில் உள்ள தானியங்கி டோக்கன் முறையைப் போன்ற நடைமுறை இங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், புறநோயாளிகள் சேவையில் தேவையற்ற குழப்பங்களையும், முறைகேடுகளையும் தவிா்க்க முடியும். முதல்கட்டமாக பொது மருத்துவம், முடநீக்கியல், குருதி நோயியல், புற்றுநோய், கல்லீரல் நலன் உள்பட 15 துறைகளில் அத்தகைய டோக்கன்களை காட்சிப்படுத்தும் திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. புறநோயாளிகள் பதிவு செய்யும் இடத்திலேயே அதற்கான டோக்கன்களைப் பெற்றுக் கொண்டு, உரிய வரிசை எண்ணில் மருத்துவா்களை பாா்க்கலாம். இந்த நடைமுறையால் பொது மக்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் கிடைப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து துறைகளிலும் இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com