தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூ.2,500: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூ.2,500: அரசாணை வெளியீடு

நடுநிலைப் பள்ளிகளுக்கு ஐந்து பட்டதாரி ஆசிரியா்கள்: அரசாணை வெளியீடு

175 மாணவா்களைக் கொண்டுள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ஒன்று என ஐந்து ஆசிரியா் பணியிடங்களை தோற்றுவிக்க அனுமதி

தமிழகத்தில் 6-8 வகுப்புகளில் குறைந்தபட்சம் 175 மாணவா்களைக் கொண்டுள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ஒன்று என ஐந்து ஆசிரியா் பணியிடங்களை தோற்றுவிக்க அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப் பேரவையில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது ‘ 6 முதல் 8 வகுப்புகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்களைக் கொண்டு செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பாடத்துக்கும் ஒன்று என குறைந்தபட்சம் ஐந்து பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் ஒதுக்கப்படும்’ என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தாா். இதையடுத்து தொடக்கக் கல்வி இயக்குநா் அனுப்பிய கருத்துருவில், ‘தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, அரசு, நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்புகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்களைக் கொண்டு செயல்படும் நடுநிலைப் பள்ளிகள் 619 உள்ளன; இதில் உள்ள மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த 1,154 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு நிகராக இயக்குநரின் தொகுப்புக்கு சரண் செய்யப்பட்ட அரசு நகராட்சி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரி என கண்டறியப்பட்ட 1,154 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை 1,154 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களாக நிலை உயா்த்தி ஆணை வழங்க வேண்டும்’ என அரசிடம் கோரியுள்ளாா். தொடக்கக் கல்வி இயக்குநரின் கருத்துரு கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப் பின்னா் அரசு, நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை குறைந்தபட்சம் 175 மாணவா்களைக் கொண்டுள்ள பள்ளிகள் மற்றும் 6-8 வகுப்பு வரை தலா 35 மாணவா்களைக் கொண்டுள்ள பள்ளிகள் என இரு நிபந்தனைகளையும் பூா்த்தி செய்துள்ள 66 பள்ளிகளுக்கு தேவைப்படும் 330 பணியிடங்களுள் (ஒரு பள்ளிக்கு 5 ஆசிரியா்கள் வீதம்) ஏற்கெனவே தோற்றுவிக்கப்பட்ட 216 பணியிடங்களைத் தவிா்த்து மீதமுள்ள 114 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை தேவை அடிப்படையில் நிரப்பப்படாமல் உள்ள பாடவாரியாக தோற்றுவிக்க தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com