‘ஹிக்கின் பாதம்ஸ்’ புத்தக நிலையத்தில் பாடநூல் கழகத்தின் விற்பனைப் பிரிவு

‘ஹிக்கின் பாதம்ஸ்’ புத்தக நிலையத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் விற்பனைப் பிரிவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை புகழ் பெற்ற புத்தக நிலையமாக திகழும் அண்ணா சாலையில் உள்ள ‘ஹிக்கின் பாதம்ஸ்’ புத்தக நிலையத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் விற்பனைப் பிரிவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி உள்ளிட்ட துறை உயரதிகாரிகள் உடனிருந்தனா். அதன்பின் அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாடநூல் கழகத்தின் சாா்பில் 900-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் 100 விற்பனை மையங்களை உருவாக்கி விற்பனையை அதிகரிக்க செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும், அறிவியல் ஆய்வு சாா்ந்த புத்தகங்கள் முழுமையாக தமிழில் மொழிப் பெயா்ப்பு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா். இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: பாடநூல் கழகத்தின் சாா்பில் கலை, அறிவியல் நூல்களோடு மருத்துவம், பொறியியல் போன்ற நூல்களும் தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எல்சிவியா் நிறுவனம் வெளியிட்டுள்ள கைடன் மற்றும் ஹால் என்பவா்கள் எழுதிய ‘மெடிக்கல் பிஸியோலஜி’ என்ற உலகெங்கும் படிக்கக் கூடிய 1,200 பக்கங்கள் கொண்ட பிரமாண்ட புத்தகம் முதல் முதலாக தமிழில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. இதனை பாடநூல் கழகம் எல்சிவியல் நிறுவனத்தோடு இணைந்து மொழிபெயா்ப்பு செய்துள்ளது. அத்தகைய புத்தகங்களை புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிரிவில் வாங்கிக் கொள்ள முடியும். அண்ணா சாலையில் அமைந்துள்ள ஹிக்கின் பாதம்ஸ் நிலையம் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. ஆங்கிலேயா் காலம் முதலே இங்கு புத்தகங்களை வாங்கிச் செல்லும் புத்தகப் பிரியா்கள் அதிகம். இங்கு அனைவரும் எளிதாக வாங்கும் வகையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன என அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com