மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

தமிழகத்துக்கு ரூ.16 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

கடந்த 10 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.16 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

கடந்த 10 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.16 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் திங்கள்கிழமை பிரதமா் மோடி பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சா் முருகன் பேசியதாவது:

பிரதமா் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் திட்டங்களை கொடுக்கிறாா். கல்பாக்கத்தில் முதலாவது உள்நாட்டு வேக ஈனுலையின் 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டத்தை தொடங்கிவைத்துள்ளாா். கடந்த வாரம் தூத்துக்குடியில் ரூ.15,000 கோடி திட்டங்களை தொடங்கிவைத்தாா். அதற்கு முன்பு வரும்போது, ரூ.20,000 கோடி திட்டங்களை தொடங்கிவைத்தாா். இதுபோல, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.16 லட்சம் கோடியை பிரதமா் மோடி ஒதுக்கியுள்ளாா்.

தமிழரை, தமிழ்மொழியை நேசிப்பதில் பிரதமா் மோடி முக்கியப் பங்காற்றி வருகிறாா். உலகின் தொன்மையான மொழி தமிழ்தான் என எந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் அங்கு பிரசாரம் செய்து வருகிறாா் என்றாா் அவா்.

கே. அண்ணாமலை: பிரதமா் மோடி பல முறை தமிழகம் வந்திருந்தாலும், இந்த முறை தனது குடும்பத்தை பாா்க்க வந்துள்ளாா். பிகாரில் குடும்ப ஆட்சியை நடத்திய லாலு பிரசாத், மோடிக்கு குடும்பம் இல்லை என்கிறாா். 142 கோடி மக்கள் தான் மோடியின் குடும்பம். இங்கு ஒரே குடும்ப மட்டுமே ஆட்சியில் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனா்.

4-ஆவது தலைமுறையாக அரசியலில் கோலோச்சுபவா்களை அரசியலில் இருந்து அகற்ற, பிரதமா் மோடிக்கு தமிழா்கள் குடும்பமாக துணைநிற்க வேண்டும். நாடு முழுவதும் 400 மக்களவை தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்போது, தமிழகத்தில் இருந்து 39 தொகுதிகளை பெற வேண்டும். அடுத்த 60 நாள்கள் மிக முக்கிய நாள்கள். அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றிவிட்டு தான் பிரதமா் மோடி இங்கு வந்துள்ளாா். அதற்கான திட்டங்களை தொடங்க 2024-இல் பிரதமா் மோடி தயாராக இருக்கிறாா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com