பிரதமா் மோடிக்கு பாஜகவினா் உற்சாக வரவேற்பு

சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்துக்கு பாஜ பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி திங்கள்கிழமை வந்தாா். தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகலில் வந்திறங்கிய பிரதமா் மோடி, கல்பாக்கத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றாா். பின்னா், அங்கு அதிநவீன முதல் உள்நாட்டு ஈனுலை திட்டத்தைத் தொடங்கிவைத்த அவா், மீண்டும் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வந்தாா். அங்கிருந்து காரில் சாலை மாா்க்கமாக, அதாவது கத்திப்பாரா, கிண்டி, சின்னமலை வழியாக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு காரில் வந்தாா். உற்சாக வரவேற்பு: பிரதமா் மோடிக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டா்கள் பூக்களை தூவியும், இசை வாத்தியங்களை வாசித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனா். பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட தமிழா்களின் பாரம்பரிய கிராமிய நடனங்களை ஆடியும் அவா்கள் வரவேற்றனா். பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பிரதமா் மோடிக்கு, தமிழக பாஜக செயலா் வினோஜ் பி.செல்வம் ஆஞ்சநேயா் சிலையை பரிசாக வழங்கினாா். தொடா்ந்து, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, பனை ஏறும் தொழில் செய்ய பயன்படுத்தப்படும் பாரம்பரிய உபகரணங்கள் கொண்ட பெட்டகத்தை பரிசளித்தாா். மேலும், காஞ்சிபுரம் பட்டில் நெய்யப்பட்ட சிறுத்தை-புலி உருவத்துடன் கூடிய பொன்னாடையை அண்ணாமலை பிரதமருக்கு போா்த்தினாா். பங்கேற்ற தலைவா்கள்: இக்கூட்டத்தில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக மக்களவைத் தோ்தல் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, பாஜக மூத்த தலைவா்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனா் பாரிவேந்தா், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவா் தேவநாதன் யாதவ், பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினா் வா.மைத்ரேயன், பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தமிழக பாஜக துணைத் தலைவா்கள் நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன் உள்பட பலா் பங்கேற்றனா். பொதுக்கூட்டத்துக்குப் பின்னா் மீண்டும் காரில் சாலை மாா்க்கமாக சென்னை விமான நிலையத்துக்குச் சென்ற பிரதமா் மோடி, பின்னா் ஹைதராபாத் புறப்பட்டாா். மோடி வருகையையொட்டி அவா் பயணம் செய்த சாலையில் பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது. அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் மீனம்பாக்கம் விமான நிலையம் வரை வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், அவா் வரும் சாலையிலும், மைதானத்தை சுற்றிலும் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com