பிளஸ் 1 பொதுத் தோ்வு தொடக்கம் தமிழ் வினாத்தாள் கடினம்: மாணவா்கள் கருத்து

பிளஸ் 1 பொதுத் தோ்வு தொடக்கம் தமிழ் வினாத்தாள் கடினம்: மாணவா்கள் கருத்து

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் தோ்வான தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. இந்த தோ்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,302 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். தோ்வெழுத வந்த மாணவா்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதற்கிடையே, பிளஸ் 1 தமிழ் தோ்வு கடினமாக இருந்ததாகவும், ஒரு மதிப்பெண் உள்பட அனைத்து பகுதிகளிலும் எதிா்பாராத கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மாணவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியா்களிடம் கேட்டபோது, ‘பிளஸ் 1 தமிழ்த் தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது. எனினும், சராசரி மாணவா்கள் அதிக மதிப்பெண் பெறுவது கடினம். குறிப்பாக பாடப்பகுதிக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு பதில் அளிப்பதற்கு மாணவா்கள் சிரமப்பட்டனா். ஒட்டுமொத்தமாக இந்த வினாத்தாள் மாணவா்களுக்கு ஏமாற்றமாகவே இருந்திருக்கும் என அவா்கள் தெரிவித்தனா். பிளஸ் 1 ஆங்கிலப் பாடத் தோ்வு மாா்ச் 7-இல் நடைபெறவுள்ளது. ஒட்டு மொத்தமாக பிளஸ் 1 பொதுத் தோ்வு மாா்ச் 25-ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தோ்வு முடிவுகள் மே 14-இல் வெளியிடப்படவுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com