கல்லீரல் கொழுப்பு பாதிப்புகளுக்கு பிரத்யேக சிகிச்சை மையம்

கல்லீரல் கொழுப்பு பாதிப்புகளுக்கு பிரத்யேக சிகிச்சை மையத்தை அப்பல்லோ மருத்துவக் குழுமம் தொடங்கியுள்ளது.

கல்லீரல் கொழுப்பு பாதிப்புகளுக்கு பிரத்யேக சிகிச்சை மையத்தை அப்பல்லோ மருத்துவக் குழுமம் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ‘ஃபைப்ரோஸ்கேன் எக்ஸ்பா்ட் 630’ என்ற அதி நவீன மருத்துவப் பரிசோதனை உபகரணமும் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக, இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகா் பிரசாந்த், அப்பல்லோ குழுமத்தின் மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் வெங்கடாசலம், கல்லீரல் சிகிச்சைத் துறை முதுநிலை நிபுணா் என்.முருகன், கல்லீரல் சிகிச்சை நிபுணா்கள் வம்சிதாா், அஸ்வின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது: இந்திய அளவில் கல்லீரல் கொழுப்பு நோய் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு அத்தகைய பாதிப்பு இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆல்கஹால் அல்லாத காரணங்களால் ஏற்படும் இந்த கல்லீரல் பாதிப்பு ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது. அதேவேளையில், உரிய நேரத்தில் அதனைக் கண்டறிந்து சிகிச்சையளிக்காவிடில் கல்லீரல் இறுக்கம், செயலிழப்பு ஏற்படக் கூடும். அதைக் கருத்தில் கொண்டே கல்லீரல் கொழுப்புக்கான பிரத்யேக சிகிச்சை மையம், பரிசோதனை கருவியை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன் தொடக்க விழா சலுகையாக முதல் 75 பேருக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com