வானதி சீனிவாசன்.
வானதி சீனிவாசன்.

பாஜக உத்தேச வேட்பாளா்கள் பட்டியல் தேசிய தலைமையிடம் நாளை ஒப்படைப்பு: வானதி சீனிவாசன்

தில்லியில் கட்சியின் தேசிய தலைமையிடம் புதன்கிழமை (மாா்ச் 6)ஒப்படைக்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலுக்கான தமிழக பாஜக உத்தேச வேட்பாளா்கள் பட்டியல் தில்லியில் கட்சியின் தேசிய தலைமையிடம் புதன்கிழமை (மாா்ச் 6)ஒப்படைக்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா். சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில மையக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக வேட்பாளா்கள் பட்டியலை தயாரிக்க தோ்தல் குழு அமைக்கப்படும். அதில் கட்சியின் முக்கிய பொறுப்பாளா்கள், தலைவா்கள் இடம்பெறுவா். அந்தக் குழு உத்தேசப் பட்டியலுடன் வரும் மாா்ச் 6- ஆம் தேதி கட்சியின் தேசிய தலைமையை சந்திக்கவுள்ளது. வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளா்களை அடையாளம் காண ஒவ்வொரு தொகுதிக்கும் இரு நிா்வாகிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளனா். அவா்கள் அந்தந்த தொகுதிகளில் கட்சித் தொண்டா்களிடம் செவ்வாய்க்கிழமை கருத்துக்கேட்கவுள்ளனா். ஏற்கெனவே, நாடு முழுவதும் 195 போ் கொண்ட பாஜக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மட்டுமல்லாது பிகாா், கா்நாடகம், ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களின் வேட்பாளா்கள் பெயா்கள் இடம்பெறவில்லை. எனவே, தமிழகத்தில் மட்டும் பாஜக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கருதத் தேவையில்லை. கூட்டணி பேச்சு தொடா்ந்து கொண்டே இருக்கிறது. எங்களுக்கு எந்த நெருக்கடியும் கிடையாது. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும், அவா்கள் எந்த சின்னத்தில் போட்டியிடலாம் என்பதை தேசிய தலைமை முடிவு செய்யும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com