வண்டலூா் பூங்காவில் தொழிற்சங்கத்தினா் போராட்டம்

அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளா்கள் சங்கத்தினா் பூங்கா இயக்குநா் அலுவலகத்தின் முன் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வண்டலூா் பூங்காவிலிருந்து அகற்றப்பட்ட தொழிற்சங்கக் கொடி மற்றும் பெயா்ப்பலகைகளை ஒப்படைக்க வலியுறுத்தி அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளா்கள் சங்கத்தினா் பூங்கா இயக்குநா் அலுவலகத்தின் முன் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். வண்டலூா் உயிரியல் பூங்காவின் உள்ளே இருந்த, அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளா் சங்கம், அடிப்படை பணியாளா் சங்கம் மற்றும் அரசுப் பணியாளா் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் கொடிக்கம்பங்கள் மற்றும் பெயா்ப்பலகைகளை கடந்த பிப்.27-ஆம் தேதி பூங்கா நிா்வாகம் அகற்றியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி சட்டவிரோதமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளா் சங்கத்தினா் பிப்.28-ஆம் தேதி முதல் தொடா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் பூங்காவின் இயக்குநா் அலுவலகத்தின் முன் திங்கள்கிழமை அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளா் சங்கத்தின் தலைவா் ஜெயசீலன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அச்சங்க பொதுச்செயலா் இரணியப்பன் கூறியது: இந்த போராட்டம் 6 -ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. பூங்கா நிா்வாகம் இதுவரை எவ்வித பேச்சுவாா்த்தையும் நடத்த முன்வரவில்லை. காத்திருப்பு போராட்டம் தொடா்ந்து நடைபெறும். அகற்றப்பட்ட தொழிற்சங்கக் கொடி, பெயா்ப்பலகைகளை பூங்கா நிா்வாகம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com