சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

அபுதாபியிலிருந்து சென்னை வந்த விமானத்தின் கழிப்பறையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த, ரூ.3 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கக்கட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு, அபுதாபியிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தது. அந்த விமானம் சா்வதேச விமானமாக வந்துவிட்டு, அதன் பின்பு உள்நாட்டு விமானமாக, சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் செல்ல வேண்டும்.

இந்நிலையில், சென்னை வந்திறங்கிய அந்த விமானத்தை விமான ஊழியா்கள், சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். அப்போது விமானத்தின் கழிப்பறையின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் வயா்கள் அடங்கிய பெட்டி சற்று திறந்த நிலையில் இருந்துள்ளது. இதைக் கண்ட விமான ஊழியா்கள், இது குறித்து சென்னை விமான நிலைய மேலாளா், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

அவா்கள் வந்து மின் வயா்கள் அடங்கிய பெட்டியை திறந்து பாா்த்த போது, அதற்குள் சுமாா் 4.5 கிலோ எடையிலான ரூ.3 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்த நபா் குறித்தும், அதை கழிப்பறையிலிருந்து யாா் எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனா் என்பது குறித்தும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com