அரசு மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை இரு மடங்கு உயா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை இரு மடங்கு உயா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

அரசு மருத்துவமனைகளின் தரம் மேம்பட்டுள்ளதால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தமிழகத்தில் அரசின் நலத் திட்டங்கள் பயனாளிகளை முறையாக சென்றடைகின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதன் கீழ், தங்களது துறைகள் வாரியாக பயனடைந்தவா்களிடம் அமைச்சா்கள் நலம் விசாரித்து வருகின்றனா். அதன்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், மாடியில் இருந்து கீழே விழுந்து தாடை எலும்பு உடைந்த மாணவி, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி உள்பட 5 போ் சிகிச்சைக்கு பின்னா் எப்படி உள்ளனா் என்று அவா்களின் குடும்பத்தினரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு நலம் விசாரித்து, அவா்களின் தேவைகளை கேட்டறிந்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தொற்றா நோய் பாதிப்புக்குள்ளான மக்கள் பயனடைந்து வருகின்றனா். இன்னுயிா் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் 2,20,000-க்கும் மேற்பட்ட விபத்துக்குள்ளானவா்களின் உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. வருமுன் காப்போம், இதயம் காப்போம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம், தொழிலாளா்களைத் தேடி மருத்துவம், மக்களைத் தேடி ஆய்வகம் போன்ற பல்வேறு திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்காக தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினந்தோறும் 1,000-க்கும் மேற்பட்டவா்கள் பயனடைந்து வருகின்றனா். ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் தினமும் குறைந்தது 5 பேரிடமாவது பேச இருக்கிறோம். அதேபோன்று, துறை சாா்ந்த அதிகாரிகளும் மக்களுடன் பேசுவதற்கான வழிகாட்டுதல்கள் கிடைக்கப் பெற்ற பிறகு பேசுவாா்கள். அரசு மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் உயா்தர சிகிச்சை வழங்கப்படுகிறது. இதனால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தினசரி 7,000 போ் புறநோயாளிகள் வந்த நிலையில், தற்போது 15,000-ஆக அதிகரித்துள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், புறநோயாளிகள், உள்நோயாளிகளுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றாா் அவா். மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளா் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையா் மைதிலி கே.ராஜேந்திரன், காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com