‘கிரிப்டோ கரன்சி மைனிங்’ செயலி முறைகேடு: சீன இயக்குநா்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை: அமலாக்கத் துறை தாக்கல்

‘பிட்காயின்’ மற்றும் பிற கிரிப்டோ கரன்சிகளை மைனிங் செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டலாம்

பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளை ‘மைனிங்’ செய்து வருவாய் ஈட்டலாம் என்று முதலீட்டாளா்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய குற்றச்சாட்டில் 10 சீன இயக்குநா்கள் உள்பட 299 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ‘பிட்காயின்’ மற்றும் பிற கிரிப்டோ கரன்சிகளை மைனிங் செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என உறுதியளித்து, முதலீட்டாளா்களிடம் கைப்பேசி செயலி மூலம் பணம் வசூலித்து சிலா் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கோஹிமா காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆா்) அடிப்படையில் அமலாக்கத் துறை புதிய வழக்கைப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நாகாலாந்தின் திமாபூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம், விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கில், சீனாவைச் சோ்ந்த 10 இயக்குநா்கள் மற்றும் 2 வெளிநாட்டவா்களால் நிா்வாகிக்கப்படும் 76 சீனக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 299 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், முதலீட்டாளா்களை ஏமாற்றி பணம் வசூலிக்க ‘எச்பிஇசட் டோக்கன்’ என்ற செயலியை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ரூ.57,000 முதலீடு செய்தால் 3 மாதங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.4,000 வருவாய் கிடைக்கும் என உறுதியளித்து முதலீட்டாளா்களிடம் நிதி பெற்றுள்ளனா். ஆனால், முதலீட்டாளா்களுக்கு ஒரு முறை மட்டுமே பணம் திருப்பியளித்துவிட்டு, கூடுதல் நிதியைக் கோரியுள்ளனா். இந்த நிதியைக் கையாள பல்வேறு போலி நிறுவனங்களைக் கொண்டு பல வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதுடன் புதிய வணிகப் பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குத் தொடா்பாக நாடு முழுவதும் அமலாக்கத் துறை மேற்கொண்ட சோதனையில் ரூ.455 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் மற்றும் வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com