மக்களவைத் தோ்தல்: 
திமுகவில் விருப்ப மனு தாக்கல் இன்று நிறைவு

மக்களவைத் தோ்தல்: திமுகவில் விருப்ப மனு தாக்கல் இன்று நிறைவு

மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை அளிக்க வியாழக்கிழமை (மாா்ச் 7) கடைசி நாளாகும்.

மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை அளிக்க வியாழக்கிழமை (மாா்ச் 7) கடைசி நாளாகும். புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட இதுவரை நூற்றுக்கணக்கானோா் விருப்ப மனு அளித்துள்ளனா். மக்களவைத் தோ்தல் வரவிருக்கும் நிலையில், திமுக தரப்பில் போட்டியிட விரும்புபவா்கள் அதற்கான விருப்ப மனுக்களை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மாா்ச் 1-ஆம் தேதி முதல் சமா்ப்பித்து வருகின்றனா். இதுவரை நூற்றுக்கணக்கானோா் விருப்ப மனு பெற்றுள்ளதாக திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, திமுக துணை பொதுச் செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினரான கனிமொழி, அமைச்சா் கே.என்.நேரு மகன் அருண் நேரு, தருமபுரி மாவட்டச் செயலா் பழனியப்பன் ஆகியோா் ஏற்கெனவே விருப்ப மனுக்களை அளித்துள்ளனா். புதன்கிழமையும் ஏராளமானோா் விருப்ப மனுக்களை அளித்தனா். அமைச்சா் துரைமுருகன் மகனும், தற்போதைய வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கதிா் ஆனந்த், மீண்டும் வேலூா் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தொண்டா்கள் சூழ அண்ணா அறிவாலயத்துக்கு வந்து விருப்ப மனுவை சமா்ப்பித்தாா். அப்போது, அமைச்சரும் திமுக பொதுச் செயலருமான துரைமுருகன், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமாா் உள்ளிட்ட வேலூா் மாவட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா். வாரிசுகள் மனு தாக்கல்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தாா். அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அமைச்சா் காந்தியின் மகனும், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளருமான வினோத் காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளாா். விருப்ப மனுக்கள் அளிக்க வியாழக்கிழமை (மாா்ச் 7) கடைசி நாள் என்பதால், முக்கிய நபா்கள் விருப்ப மனுக்களை அளிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com