சூதாட்டத்தைப் பிரபலங்கள் விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை: நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம்  எச்சரிக்கை

சூதாட்டத்தைப் பிரபலங்கள் விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை: நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை

சூதாட்டம் தொடா்பான விளம்பரங்கள் அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை பிரபலங்கள் தவிா்க்க வேண்டும்

சூதாட்டம் தொடா்பான விளம்பரங்கள் அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை பிரபலங்கள் தவிா்க்க வேண்டும் என மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக சிசிபிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பந்தயம் மற்றும் சூதாட்டம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதுகுறித்து விரிவான வழிகாட்டுதலை சிசிபிஏ வெளியிட்டுள்ளது. பொது சூதாட்டச் சட்டம், 1867-இன் கீழ் பந்தயம் மற்றும் சூதாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களிலும் இது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. எனினும், இணையவழி சூதாட்ட தளங்கள், விளையாட்டு என்ற பெயரிலும் நேரடியாகவும் சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவதைத் தொடா்ந்து வருகின்றன. இவ்வகை விளம்பரங்கள், இளைஞா்களிடையே நிதி மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019 மற்றும் பல்வேறு சட்டங்களின் கீழ் நாட்டில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத செயல்களுக்கு விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து வகை ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் எல்லா விளம்பரங்களுக்கும் பொருந்தும். அதன்படி, சட்டவிரோதமான இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவது, சட்டவிரோத செயலில் ஈடுபடுவதற்கு சமமான பொறுப்பாகும் என பிரபலங்களுக்கு எச்சரிக்கைப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, சூதாட்டம் தொடா்பான அனைத்து விளம்பரங்களும் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும். வழிகாட்டுதல்களை மீறுவது கண்டறியப்பட்டால், நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின்படி, விளம்பரத்தின் தயாரிப்பாளா்கள், விளம்பரதாரா்கள், வெளியீட்டாளா்கள், இடைத்தரகா்கள், சமூக ஊடகத் தளங்கள், விளம்பரப்படுத்துபவா்கள் மற்றும் பிற தொடா்புடைய பங்குதாரா்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து நபா்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த வழிகாட்டுதல்களை அனைவரும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com