100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வளா்ச்சித் திட்டத்தை (100 நாள் வேலை திட்டம்) பாதுகாக்க மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வளா்ச்சித் திட்டத்தை (100 நாள் வேலை திட்டம்) பாதுகாக்க மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை எழுதிய கடிதம்: மத்திய பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நிபந்தனைகளை விதித்தும், சட்டங்களை திருத்தியும், நிதி ஒதுக்கீட்டை படிப்படியாக வெட்டிச் சுறுக்கியும் இத்திட்டத்தை சிதைத்து வருகிறது. இதனால் கிராமப்புற ஏழைகள் இந்த வேலை திட்டத்தில் கிடைத்து வந்த வேலை நாட்கள் தற்போதுசரிபாதியாக குறைந்து வருமானம் இழந்து தவித்து வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக தற்போது செலவினம் சாா்ந்த பணிகளை மட்டுமே இப்போது செய்ய வேண்டுமென மத்திய ஊரக வளா்ச்சித் துறையால் அனைத்து ஊராட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏரி, வாய்க்கால், குளம், தூா்வாருதல் போன்ற வேலைகளை செய்தால் கூலி வழங்க இயலாது எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆதாா் இணைப்புடன் ஊதிய பரிவா்த்தனை எனும் திட்டத்தால் தமிழகத்தில் சுமாா் 70 லட்சம் தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். விவசாய வேலைகள் எந்திரமயமாகி உள்ள பின்னணியில் 80 சதவீத பெண் தொழிலாளா்கள் வேலை வருமானம் இழந்து சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனா். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு வேலை அட்டை பெற்றுள்ளஅனைத்து பயனாளிகளுக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரையும், மத்திய அரசையும் வலியுறுத்தி மண் சாா்ந்த நீா்நிலைகளில் பெருமளவு தொழிலாளா்கள் பங்கேற்கும் அளவில் வேலை நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்து இந்த வேலையை நம்பி வாழும் கிராமப்புற ஏழை, எளிய மக்களைபாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com