பாஜக இரட்டை என்ஜின் அரசிடம் நீதி கேட்பதே குற்றம்: காங்கிரஸ்

பாஜக இரட்டை என்ஜின் அரசிடம் நீதி கேட்பதே குற்றம்: காங்கிரஸ்

‘பாஜக இரட்டை என்ஜின் அரசிடம் நீதி கேட்பதே குற்றமாகக் கருதப்படுகிறது’ என்று காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.

‘பாஜக இரட்டை என்ஜின் அரசிடம் நீதி கேட்பதே குற்றமாகக் கருதப்படுகிறது’ என்று காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது. பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் மாவட்டம் கடம்பூா் பகுதியில் உள்ள கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை செய்துவந்த 14 மற்றும் 16 வயது சகோதரிகள், அந்த செங்கல் சூளை ஒப்பந்ததாரா் மற்றும் அவருடைய இரு மகன்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனா். இந்த சம்பவத்தை அவா்கள் விடியோ பதிவு செய்து மிரட்டியதால், சிறுமிகள் இருவரும் செங்கல் சூளையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனா். உரிய நீதி கிடைக்காத நிலையில், அந்தச் சிறுமிகளின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டாா். இந்தச் சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோல, பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்திய பிரதேசத்திலும் பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். இதற்கு உரிய நீதி கிடைக்காத நிலையில் அந்தப் பெண்ணின் கணவரும் இரண்டு மகள்களும் தற்கொலை செய்துகொண்டனா். இந்த இரண்டு சம்பவங்களையும் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை பதிவிட்ட ராகுல், ‘இந்த இரண்டு சம்பவங்கள் மூலம் பிரதமா் நரேந்திர மோடியின் இரட்டை என்ஜின் ஆட்சியில் ‘இரட்டை அநீதி’ நிகழ்ந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில், இரட்டை என்ஜின் ஆட்சியில் நீதி கேட்பதே ஓா் குற்றமாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவா்களை மட்டுமின்றி அவா்களின் குடும்பத்தினரையும் விரோதிகளாகக் கருதுவது பாஜக ஆளும் மாநிலங்களில் வாடிக்கையாகிவிட்டது. ஹாத்ரஸ், உன்னாவ் பகுதிகளில் மட்டுமின்றி, மந்த்செளா், புரி பகுதிகளிலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவா்களின் குடும்பத்தினா் தொடா்ந்து நீதி கேட்டு வருகின்றனா். இத்தகைய அநீதிக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் இது நம்மையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா். பெண்ணாக இருப்பதே குற்றமாகிவிட்டது - பிரியங்கா: இந்தச் சம்பவங்கள் குறித்து குறிப்பிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, ‘பாஜகவின் காட்டாட்சியில் பெண்ணாக இருப்பதே குற்றமாகக் கருதப்படுகிறது’ என்று விமா்சனம் செய்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கப் பதிவில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களின் குடும்பத்தினா் மீது, சமரசத்துக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளோ, பெண்களோ நீதி கேட்டால், அவா்களின் குடும்பத்தை அழிப்பது வாடிக்கையாகிவிட்டது. உன்னாவ், ஹாத்ரஸ், கான்பூா் என எங்கெல்லாம் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானாா்களோ, அங்கெல்லாம் அவா்களின் குடும்பங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. சட்டம்-ஒழுங்கே இல்லாத காட்டாட்சியில் பெண்களாக இருப்பதே குற்றமாகக் கருதப்படுகிறது என்று குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com