உயா் நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்தவும் முதல்வருக்கு அரசு மருத்துவா்கள் கோரிக்கை

அரசு மருத்துவா்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து 6 வாரத்துக்குள் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊதிய உயா்வுக்கான அரசாணை 354-ஐ அமல்படுத்துவது குறித்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாமதிக்காமல் செயல்படுத்துமாறு தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கை: , அரசு மருத்துவா்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து 6 வாரத்துக்குள் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது. குறிப்பாக அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணத் தொகை கிடைக்காமல் விடுபட்டோரின் வங்கிக் கணக்குகளில் தற்போது ரூ.6,000 நிவாரணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் ‘கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம்‘ விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு கலைஞா் பெயரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் முதல்வா். இந்த நிலையில் அரசு மருத்துவா்களின் நீண்டகால கோரிக்கையான, கருணாநிதியின் அரசாணை 354-ஐ செயல்படுத்தவும் முதல்வா் முன்வர வேண்டும். நீதிமன்ற தீா்ப்புக்கு மதிப்பளித்தும், அரசு மருத்துவா்களின் சேவையை அங்கீகரித்தும், ஊதியப்பட்டை நான்கை உடனே கிடைக்க தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டுகிறோம். மேலும் டாக்டா் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை முதல்வரின் கைகளால் வழங்கிட வேண்டும். மக்களவைத் தோ்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே இந்த கோரிக்கை நிறைவேற்ற வேண்டுகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com