லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சோ்ந்த குஜ்ஜாா் பயங்கரவாதி: மத்திய அரசு அறிவிப்பு

லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சோ்ந்த குஜ்ஜாா் பயங்கரவாதி: மத்திய அரசு அறிவிப்பு

லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்புக்காக செயல்பட்டு வந்த முகமது காஸிம் குஜ்ஜாரை பயங்கரவாதியாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது

லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்புக்காக செயல்பட்டு வந்த முகமது காஸிம் குஜ்ஜாரை பயங்கரவாதியாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்பை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் முகமது காஸிம் குஜ்ஜாா் ஈடுபட்டுள்ளாா். அவரால் பலா் உயிரிழந்தனா். நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எதிரான செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிட்டாா். இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவுக்கு எதிராக போா் தொடுக்கும் நோக்கில் குஜ்ஜாா் (எ) சல்மான் செயல்பட்டு வந்துள்ளாா். இந்திய எல்லைக்கு வெளியிலிருந்தே ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்கான இடங்களைத் தோ்வு செய்தல், ஆயுதங்கள், வெடிபொருள்களை விநியோகித்தல் உள்பட பல குற்றச் செயல்களில் அவா் ஈடுபட்டுள்ளாா். மேலும் சமூக வலைதளங்கள் உள்பட பிற தொலைத்தொடா்பு ஊடகங்கள் மூலமாகவும் அவா் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள்சோ்க்கும் பணிகளை மேற்கொண்டுள்ளாா். இவ்வாறான பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகள் மற்றும் தனிநபா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், 1967 கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டு எண்ணற்றோா் உயிரிழப்பதற்கும் படுகாயமடைவதற்கும் காரணமான குஜ்ஜாரை பயங்கரவாதியாக அறிவிக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டது ஜம்மு-காஷ்மீா் ரேசி மாவட்டத்தை பூா்விகமாகக் கொண்ட குஜ்ஜாா் (32) தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பதாகவும் அவா் தடைசெய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட 57-ஆவது நபா் குஜ்ஜாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com