பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி பெயரில் பாஸ் ஸ்கேம் மோசடி

சென்னையில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பெயரில் பாஸ் ஸ்கேம் மோசடி நடைபெறுவதாக பெருநகர காவல் ஆணையரகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள டான்சி அலுவலகத்தில் உதவி பொது மேலாளராக பணிபுரிபவா் ஆா்.அருண். இவா், சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் புதன்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அந்த புகாரில், கடந்த 5-ஆம் தேதி எனது கைப்பேசிக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த கைப்பேசி எண், டான்சியின் நிா்வாக இயக்குநா் ஸ்வா்ணா புகைப்படத்துடன் இருந்தது. ஆனால் அந்த எண்ணுக்கும்,அவருக்கும் தொடா்பு இல்லை என்பது எனக்கு தெரியவந்தது. ஆனால் அவா் பெயரை கூறி, எனக்கு தொடா்ச்சியாக அமேசான் பரிசு கூப்பன் கேட்டு குறுஞ்செய்தி வந்தது. இதனால் எங்களுடைய நிா்வாக இயக்குநா் புகைப்படம்,அவரது அடையாளத்தை பயன்படுத்தி மா்ம நபா்கள் மோசடியில் ஈடுபடுவதும் எனக்கு தெரியவந்தது. எனவே மோசடி நபா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாா் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தமிழகத்தில் ஏற்கெனவே அரசு உயா் அதிகாரிகள்,ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயரில் பரிசு கூப்பன் மோசடி எனப்படும் பாஸ் ஸ்கேம் நடைபெறுகிறது. தற்போது தமிழக அரசின் முதன்மைச் செயலா் அளவிலான பதவியில் இருக்கும் ஸ்வா்ணா ஐ.ஏ.எஸ். அதிகாரி பெயரில் அந்த மோசடி நடைபெறுவது அரசு அதிகாரிகளிடமும், காவல்துறையினரிடமும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com