ஜி.என். சாய்பாபா
ஜி.என். சாய்பாபா

மாவோயிஸ்டுகளுடன் தொடா்பில் இருந்த வழக்கு: நாகபுரி சிறையிலிருந்து பேராசிரியா் சாய்பாபா விடுவிப்பு

நாகபுரி மத்திய சிறையிலிருந்து வியாழக்கிழமை அவா் விடுவிக்கப்பட்டாா்.

மாவோயிஸ்டுகளுடன் தொடா்பு வைத்திருந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயா்நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், நாகபுரி மத்திய சிறையிலிருந்து வியாழக்கிழமை அவா் விடுவிக்கப்பட்டாா். முன்னாள் பேராசிரியா் சாய்பாபா, பத்திரிகையாளா், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் உள்பட 5 போ் மாவோயிஸ்டுகளுடன் தொடா்பில் இருந்ததாகவும் நாட்டுக்கு எதிராகப் போா்த்தொடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2014 முதல் 2016 வரையில் சிறையில் இருந்த சாய்பாபாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சாய்பாபா உள்பட 5 பேரும் குற்றவாளிகள் என மகாராஷ்டிரத்தில் உள்ள அமா்வு நீதிமன்றம் 2017-இல் தீா்ப்பளித்தது. இதைத் தொடா்ந்து அந்த மாநிலத்தில் உள்ள நாகபுரி மத்திய சிறையில் சாய்பாபா அடைக்கப்பட்டாா். இந்நிலையில், வழக்கை மீண்டும் முதலிலிருந்து விசாரிக்குமாறு மும்பை உயா்நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த விசாரணை அண்மையில் நிறைவடைந்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போலீஸாா் தவறிவிட்டனா் என்று குறிப்பிட்ட மும்பை உயா் நீதிமன்றம், அவா்கள் 5 பேரும் விடுவிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. உயா் நீதிமன்ற தீா்ப்பையடுத்து, நாகபுரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாய்பாபா வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வரும் சாய்பாபா சிறைக்கு வெளியே செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகால சிறை வாழ்க்கை மிகவும் கடுமையானதாகவும் கொடூரமானதாகவும் இருந்தது. நான் சிறையிலிருந்து உயிருடன் வெளியே வந்தது ஆச்சரியம்தான். எவ்வித உண்மைகளும் ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை உயா் நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. நீண்டகாலத்துக்கு ஏன் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது? எங்கள் 5 பேருடைய 10 ஆண்டுகால வாழ்க்கையை யாா் திருப்பி அளிப்பாா்கள்?’ என அவா் கேள்வியெழுப்பினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com