ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை

வங்கி கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்குத் தொடா்பாக, சென்னையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்தனா். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்படும் ஒரு வங்கியில் கடன் வழங்கியதில் கடந்த 2009-ஆம் ஆண்டு முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக விசாகப்பட்டினம் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். இந்த வழக்குத் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் உள்ளிட்ட 5 இடங்களில் வியாழக்கிழமை சோதனை செய்தனா். இதன் ஒருபகுதியாக முறைகேடு நடைபெற்ற காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் சென்னை கே.கே.நகா் சத்யா காா்டன் லால் பகதூா் சாஸ்திரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், சில ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னா் ராதாகிருஷ்ணன், ஆந்திர மாநிலத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com