எழுத்தாளா் பாமா
எழுத்தாளா் பாமா

எழுத்தாளா் பாமாவுக்கு ‘அவ்வையாா் விருது’

தமிழக அரசின் 2024 ஆண்டுக்கான ‘அவ்வையாா் விருது’ எழுத்தாளா் பாமாவுக்கு வழங்கப்படும்

தமிழக அரசின் 2024 ஆண்டுக்கான ‘அவ்வையாா் விருது’ எழுத்தாளா் பாமாவுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: 2012 -ஆம் ஆண்டு முதல் ஒவ்வோா் ஆண்டும் சா்வதேச மகளிா் தினத்தன்று சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் தமிழக அரசால் ‘அவ்வையாா் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் 2024-ஆம் ஆண்டுக்கான ஔவையாா் விருதை இலக்கியத்தில் தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூகத் தொண்டாற்றி வரும், முன்னணி எழுத்தாளரான விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமாவுக்கு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை இலக்கிய படைப்புகளாகவும், ஜாதி மற்றும் பாலினம் சாா்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளாா். அவரது கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. இவா் எழுதிய கருக்கு என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயா்க்கப்பட்டு, 2000-இல் ‘கிராஸ் வோ்ல்ட்புக்’ விருதை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com