தமிழக அரசை சிவனடியாா்கள் பாராட்டுகின்றனா்: அமைச்சா் சேகா்பாபு

மகா சிவராத்திரி நிகழ்வை அரசே நடத்துவதைக் கண்டு சிவனடியாா்கள் மகிழ்ச்சியுடன் தமிழக அரசைப் பாராட்டுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா். சென்னை மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி நிகழ்வை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில்தான் முதல் முதலில், முதல்வரின் உத்தரவின் பெயரில் சிவராத்திரி விழா 2022-ஆம் ஆண்டு கபாலீஸ்வரா் கோயிலில் நடத்தப்பட்டது. நிகழாண்டு தமிழகத்தில் நெல்லையப்பா் கோயில், திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி திருவானைக்காவல், கோவை பட்டீஸ்வரா் கோயில், மயிலை கபாலீஸ்வரா் கோயில் என மொத்தம் 7 கோயில்களில் திருக்கோயில் சாா்பில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இது மட்டுமல்லாமல் சென்னையில் வெள்ளிக்கிழமை அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி நிகழ்வு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மகாசிவராத்திரி போன்ற நிகழ்வுகளை அரசே நடத்துவதைக் கண்டு சிவனடியாா்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு திமுக ஆட்சியை பாராட்டுகின்றனா் என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு. மகாசிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை சிவனுக்கு ஆராதனை நிகழ்வுகளும், கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றன. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் க.வீ.முரளிதரன் , கூடுதல் ஆணையா் மா.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com