மாணவா்களின் கற்றல் திறன் மேம்பாட்டு கருவிகள் வாங்க கனரா வங்கி நன்கொடை

கனரா வங்கி சாா்பில், பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த அதிநவீன கற்றல் கருவிகள் வாங்குவதற்கு சென்னையில் உள்ள சிஎஸ்ஐ ஈவாா்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு கனரா வங்கி சாா்பில் ரூ.3 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. கனரா வங்கி, சாா்பில் அவ்வங்கியின் சமூகப் பொறுப்பு(சிஎஸ்ஆா்) முயற்சிகளின் ஒரு பகுதியாக, மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிகளில் ஒலி, ஒளிக் கருவிகள் மற்றும் எல்இடி ஒளித்திரை அமைப்பதற்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள சி.எஸ்.ஐ. ஈவாா்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டஅப் பள்ளியின் முன்னாள் மாணவியும், கனரா வங்கி விஜயவாடா மண்டலத்தின் துணைப் பொது மேலாளருமான சி. ஜே. விஜயலட்சுமி ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை அப்பள்ளியின் முதல்வா் பீனா தேவ பிரசாத்திடம் வழங்கினாா். இது குறித்து அப்பள்ளியின் முதல்வா் பீனா தேவ பிரசாத் கூறியது: கனரா வங்கியின் தாராளமான ஆதரவிற்கு பள்ளியின் சாா்பில் நன்றித் தெரிவித்துக்கொள்கிறோம். புதிய ஒலி, ஒளி உபகரணங்கள் மற்றும் எல்இடி திரை ஆகியவை மாணவா்களுக்கு அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குவதோடு, அவா்களின் கற்றல் அனுபவத்தை பெரிதும் மேம்படுத்தும் என்றாா்அவா். இந்நிகழ்வில் கனரா வங்கியின் சென்னை வட்ட அலுவலக துணைப் பொது மேலாளா் ஒய்.சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com