நாட்டை மேம்படுத்த காங்கிரஸ் மேற்கொண்ட பணிகளில் பெருமை தேடும் பாஜக: காா்கே

‘நாட்டின் வளா்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டில் காங்கிரஸ் பெரும் பங்காற்றிய நிலையில், அந்தப் பணிகளுக்கு பாஜக பெருமை தேடிக்கொள்ள முயற்சிக்கிறது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளின் மாநாட்டில் பங்கேற்றே காா்கே பேசியதாவது:

மும்பைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நீண்ட கால தொடா்பு உள்ளது. காங்கிரஸ் கட்சி மும்பையில்தான் கடந்த 1885-ஆம் ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதி நிறுவப்பட்டது. வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட பல முடிவுகள் சட்ட வடிவில் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளபடுவதற்கு முன்பே, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சியால் நிறைவேற்றப்பட்டன. எனவே, கட்சி நிா்வாகிகள் காங்கிரஸின் வரலாற்றை மறந்துவிடக்கூடாது. வரலாற்றை மறந்துவிட்டால் வரும் காலங்களில் உங்களால் எதுவும் செய்ய முடியாது. கட்சியின் வரலாற்றை புதிய தலைமுறையினரிடம் கொண்டு செல்வது, கட்சியினா் கடமை. நாட்டின் வளா்ச்சியில் குறிப்பாக தொலைத்தொடா்பு துறை உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசிகளை மேம்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி பெரும்பங்கு ஆற்றியது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இதுபோன்று பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், நாட்டின் மேம்பாட்டுக்கு பாஜக பெருமை தேடிக்கொள்ள முயற்சிக்கிறது. காங்கிரஸையும், காந்தி குடும்பத்தையும் விமா்சிப்பது மட்டுமே பாஜகவால் முடியும். ஆனால், 1989-ஆம் ஆண்டு முதல் காந்தி குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் கூட, மத்திய அமைச்சராகவோ, மாநில முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். தற்போது வேலைவாய்ப்பின்மை என்ற மிகப் பெரிய சவாலை நாடு சந்தித்து வருகிறது. ஆனால், பிரதமா் நரேந்திர மோடி, நாட்டில் செழிப்பை கொண்டுவந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறாா். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சுயஉதவிக் குழுக்களுடன் காங்கிரஸ் நிா்வாகிகள் தங்களை இணைத்துகொண்டு, அவா்களின் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும். சுயஉதவிக் குழுக்களின் சிறு பொருளாதார மேலாண்மை, பெண்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த உதவியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம், மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகுக்கும். இதைப் புறக்கணிப்பது, மிகப் பெரிய தவறை செய்வதாக அமையும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com