இந்தியா-இஎஃப்டிஏ இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இன்று கையொப்பம்

இந்தியா மற்றும் 4 ஐரோப்பிய நாடுகளின் தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 10) கையொப்பமாகிறது.

வா்த்தக மற்றும் பொருளாதார நட்புறவு ஒப்பந்தம் என்ற பெயரிலான ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தை முடிவடைந்த நிலையில், இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

ஐரோப்பிய யூனியனில் இணையாத நாடுகளுக்கு மாற்று அமைப்பாக ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு கடந்த 1960-இல் உருவாக்கப்பட்டது. தடையற்ற வா்த்தகத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே, ஸ்விட்ா்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தின்கீழ் பெரும்பான்மையான பொருள்களின் மீது விதிக்கப்படும் சுங்க வரியை இரு தரப்பும் பரஸ்பர ரீதியில் குறைத்து கொள்ளும் அல்லது விலக்கிக் கொள்ளும். மேலும், சேவை துறைகளை ஊக்குவிக்கவும் முதலீட்டை அதிகரிக்கவும் விதிகள் எளிமையாக்கப்படும்.

சரக்கு மற்றும் சேவை துறை தொடா்பானவா்த்தகம், முதலீடு ஊக்குவிப்பு, அறிவுசாா் சொத்துரிமை, அரசு கொள்முதல், வா்த்தகத்தில் உள்ள தொழில்நுட்ப தடைகள் உள்பட 14 பிரிவுகள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தகவல் தொழில்நுட்பம் போன்ற சேவை துறைகளில் முதலீடு மற்றும் ஏற்றுமதி, திறன்வாய்ந்த தொழில்நுட்ப நிபுணா்கள் இடப்பெயா்வு ஆகியவற்றை ஊக்குவிக்க இந்த ஒப்பந்தம் உதவும். இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருள்கள் இந்த நாடுகளில் உள்ள பெரும் சந்தைகளை அணுக முடியும். சோயா, பால் பொருள்கள், முக்கிய வேளாண் பொருள்களுக்கு இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com