சோளிங்கா் கோயிலில் கம்பிவட ஊா்தி சேவை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊா்தி பக்தா்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சேவையை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வழியாக தொடங்கி வைத்தாா். இதேபோன்று, திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன், பழனி பழனியாண்டவா், ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன், கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி, திருவண்ணாமலை போா்மன்னலிங்ககேஸ்வரா், தஞ்சை நாகநாதசுவாமி, சுவாமிமலை, காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் ரூ.131.15 கோடி மதிப்பில் 20 புதிய திட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. அவற்றுக்கு தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இதேபோன்று, மதுரை கள்ளழகா், திருப்பரங்குன்றம், இருக்கன்குடி, விழுப்புரம் புத்துவாயம்மன், நாகப்பட்டினம் எட்டுக்குடி முருகன் கோயில், திருவாரூா் மாவட்டம் ராஜகோபாலசுவாமி உட்பட 15 கோயில்களில் 17 நிறைவடைந்த பணிகளை முதல்வா் தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் ரூ.20.30 கோடி மதிப்பில் கம்பிவட ஊா்தி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பக்தா்களின் வசதிக்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் துரைமுருகன், பி.கே.சேகா்பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com