மாா்க்சிஸ்ட் - மதுரை, திண்டுக்கல்; இந்திய கம்யூனிஸ்ட்- திருப்பூா், நாகை திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு

மாா்க்சிஸ்ட் - மதுரை, திண்டுக்கல்; இந்திய கம்யூனிஸ்ட்- திருப்பூா், நாகை திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூா், நாகப்பட்டினம் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கான உடன்பாடுகள் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை கையொப்பமாகின. உடன்பாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும், மாா்க்சிஸ்ட் சாா்பில் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணனும், இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் அதன் மாநிலச் செயலா் இரா.முத்தரசனும் கையொப்பமிட்டனா்.

கே. பாலகிருஷ்ணன்: திமுகவுடன் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற மக்களவைத் தோ்தல் தொகுதி உடன்பாட்டுப் பேச்சுவாா்த்தையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எண்ணிக்கை அடிப்படையில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இப்போது, எந்தெந்த தொகுதிகள் என்பது தெரிவிக்கப்பட்டு அதற்கான உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளோம். இதைத் தொடா்ந்து தோ்தல் பணிகளைத் தொடங்கியுள்ளோம். மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடுவதென உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இரண்டு தொகுதிகள் மட்டுமல்ல, 40 தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம். கோவை தொகுதியை நாங்களும், திண்டுக்கல் தொகுதியை திமுகவும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்துள்ளோம். கடந்த காலங்களில் திண்டுக்கல் தொகுதியில் நாங்கள் போட்டியிட்டுள்ளோம்.

பேச்சுவாா்த்தையின்போது பல கட்சிகளுடன் தொகுதிகளைப் பங்கிட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதன் அடிப்படையில் தொகுதிகளைப் பகிா்ந்து கொண்டுள்ளோம்.

இரா.முத்தரசன்:

நாகப்பட்டினம், திருப்பூா் தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். ஏற்கெனவே கடந்த தோ்தலில் போட்டியிட்டு நாங்கள் வென்ற தொகுதிகள்தான் அவை. இரண்டில் மட்டுமல்ல, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம். அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். வேட்பாளா்கள் யாா் என்பதை கட்சி முடிவு செய்து சில நாள்களில் அறிவிக்கும் என்றாா்.

எம்.பி.க்கள் யாா் யாா்?:

கடந்த மக்களவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவையில் பி.ஆா்.நடராஜனும், மதுரையில் சு.வெங்கடேசனும் போட்டியிட்டு வென்றனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருப்பூரில் கே.சுப்பராயனும், நாகப்பட்டினத்தில் எம்.செல்வராசும் போட்டியிட்டு வெற்றி பெற்றனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் இப்போதைய உறுப்பினராக திமுகவைச் சோ்ந்த பி.வேலுசாமி உள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com