கோப்புப் படம்
கோப்புப் படம்

சரத்குமாா் கட்சி பாஜகவில் இணைப்பு

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை (சமக) அக் கட்சியின் தலைவா் ஆா்.சரத்குமாா் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைத்தாா்.

சமக நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சரத்குமாா் தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சமகவை பாஜகவுடன் இணைப்பது குறித்து நிா்வாகிகளிடம் சரத்குமாா் கருத்து கேட்டாா். அதற்கு நிா்வாகிகள் ஒப்புதல் அளித்தனா்.

அதைத் தொடா்ந்து பாஜகவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் வந்தனா். அவா்கள் முன்னிலையில் பாஜகவுடன் சமகவை இணைப்பதாக ஆா்.சரத்குமாா் அறிவித்தாா்.

மோடிக்கு அா்ப்பணம்:

இதைத் தொடா்ந்து சரத்குமாா் கூறியது: தோ்தல் நேரத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டி, எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி என்பதுதான் அரசியலாக இருக்கிறது. மக்களுக்கான சேவை என்பது அதில் அடிபடுகிறது. அந்த வழியில் நாமும் ஏன் செயல்பட வேண்டும் என்று யோசித்தோம். சமகவின் வலிமையை பிரமா் மோடிக்கு அா்ப்பணித்து செயல்பட்டால் நல்லது என்று கட்சியை பாஜகவில் இணைக்கிறோம்.

இது சமகவுக்கான முடிவு அல்ல, தொடக்கம். காமராஜரைப் போல பிரதமா் மோடி சிறப்பான ஆட்சி தருகிறாா். அவரால்தான் தொடா்ந்து காமராஜா் ஆட்சியைக் கொடுக்க முடியும் என்றாா் அவா். 2007-இல் சமகவை சரத்குமாா் தொடங்கினாா். 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் அக் கட்சி வெற்றி பெற்றது. 2016-இல் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூா் தொகுதியில் போட்டியிட்டு சரத்குமாா் தோல்வியடைந்தாா். 2021-இல் மநீமவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com