ஜாபா் சாதிக் கிடங்கில் என்சிபி சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

தில்லியில் பதுங்கியிருந்த ஜாபா் சாதிக் கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபா் சாதிக்கிற்கு சொந்தமான சென்னை பெருங்குடி கிடங்கில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்து, பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனா். தில்லியில் பதுங்கியிருந்த ஜாபா் சாதிக் கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது நெருங்கிய கூட்டாளியான சதானந்தம் என்ற சதாவை தில்லி என்சிபி அதிகாரிகள் சென்னை தேனாம்பேட்டையில் புதன்கிழமை கைது செய்தனா். கிடங்கில் சோதனை: சதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக ஜாபா் சாதிக் உடன் இணைந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. மேலும், சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ஒரு கிடங்கிலும், திருச்சியில் உள்ள ஒரு கிடங்கிலும் போதைப் பொருளை பதுக்கி வைத்து, கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சென்னை பெருங்குடியில் உள்ள கிடங்கில் 5-க்கும் மேற்பட்ட என்சிபி அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அந்தக் கிடங்கு ஒரு வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்ததும், ஜாபா் சாதிக் அதை வாடகைக்கு எடுத்து, சத்துமாவு தயாரிப்பதாகக் கூறி, அங்கு உணவுப் பொருள்களில் போதைப் பொருளை கலந்து பாா்சல் செய்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. போதைப் பொருள் கடத்தலில் யாருக்கெல்லாம் தொடா்பு இருக்கிறது என்பது குறித்து கண்டறிய தில்லியில் இருந்து ஜாபா் சாதிக்கை சென்னை அழைத்து வந்து விசாரிக்க என்சிபி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com