ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை: 949 நோயாளிகளுக்கு மறுவாழ்வு

இதுவரை 949 நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் இதுவரை 949 நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என கல்லூரியின் முதல்வா் டாக்டா் பி.பாலாஜி தெரிவித்தாா். ஆண்டுதோறும் மாா்ச் 14 அன்று உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்வில், கல்லூரி முதல்வா் டாக்டா் பி.பாலாஜி பேசியது: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதுவரை சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் 949 நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது 30 டயாலிஸிஸ் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமாா் 25,000-க்கும் அதிகமான ஹிமோடையாலிஸிஸ் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. புறநோயாளிகளாக தினமும் சுமாா் இருநூறுக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா் என்றாா் அவா். இந்நிகழ்வில், டாக்டா் முத்துஜெயராம், கல்லூரி துணை முதல்வா் ஜெனத் சுகந்தா, மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் மகேஷ், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com