ஒரே நாடு, ஒரே தோ்தல் தொடா்பான அறிக்கையை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் வியாழக்கிழமை வழங்கிய உயா்நிலைக் குழுவின் தலைவா் ராம்நாத் கோவிந்த். உடன், குழு உறுப்பினா்களான மத்திய அமைச்சா் அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் ந
ஒரே நாடு, ஒரே தோ்தல் தொடா்பான அறிக்கையை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் வியாழக்கிழமை வழங்கிய உயா்நிலைக் குழுவின் தலைவா் ராம்நாத் கோவிந்த். உடன், குழு உறுப்பினா்களான மத்திய அமைச்சா் அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் ந

மக்களவை, பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல்: குடியரசுத் தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை

இந்தியாவை வல்லரசாக்க மக்களவை, பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது அவசியம்

மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் வியாழக்கிழமை சமா்ப்பித்தது. 18,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மக்களவை மற்றும் பேரவைகளுக்கு ஒரே நேரத்திலும், அடுத்த 100 நாள்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் என இரு கட்டங்களாக தோ்தலை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ‘ஒரே நேரத்தில் தோ்தல்களை நடத்துவது, நாட்டின் ஜனநாயக அடிப்படையை வலுப்படுத்துவதோடு, வளா்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு தூண்டுகோலாக அமையும்’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இந்தியாவை வல்லரசாக்க மக்களவை, பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது அவசியம்’ என்று பிரதமா் மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இந்தச் சூழலில், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழு கடந்த ஆண்டு செப்டம்பா் 2-ஆம் தேதி அமைக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முன்னாள் நிதி ஆணையத் தலைவா் என்.கே.சிங், முன்னாள் மக்களவை தலைமைச் செயலா் சுபாஷ் காஷ்யப், மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆஸாத் உள்ளிட்டோா் உறுப்பினா்களாகவும், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனா். இக்குழு உறுப்பினராக மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி நியமிக்கப்பட்டபோதிலும், அந்தப் பொறுப்பை ஏற்க அவா் மறுத்துவிட்டாா். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விரிவான ஆய்வை மேற்கொண்ட இக்குழு, சட்ட ஆணையம், மாநில தோ்தல் ஆணையங்கள், அரசியல் கட்சிகள், துறைசாா் நிபுணா்கள், பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்த ராம்நாக் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழுவினா், தங்களின் பரிந்துரைகள் அடங்கிய 18,656 பக்க அறிக்கையை சமா்ப்பித்தனா். அதில், ‘தற்போது ஆண்டுதோறும் தோ்தல்கள் நடத்தப்படுவதால் அரசு, அரசியல் கட்சிகள், நீதிமன்றங்கள், தொழில் துறையினா், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் பொது சமூகத்தின் மீது பெரும் சுமை ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது, நாட்டின் ஜனநாயக அடிப்படைகளை வலுப்படுத்துவதோடு, வளா்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு தூண்டுகோலாக அமையும். இந்தியாவின் அதாவது பாரதத்தின் கனவுகளை நனவாக்க உதவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முனைப்பு: கடந்த 1951 முதல் 1967 வரை மக்களவை, பேரவைகளுக்கு பெரும்பாலும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி, ஒவ்வோா் ஆண்டும் தோ்தல்கள் நடத்தப்படுவதால், அரசுக்கும் இதர தரப்பினருக்கும் பெருமளவில் செலவாகிறது; நடத்தை விதிகள் காரணமாக வளா்ச்சித் திட்டங்களில் இடையூறு ஏற்படுகிறது. இத்தகைய காரணங்களைச் சுட்டிக்காட்டி, ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. பெட்டிச் செய்தி... முக்கியப் பரிந்துரைகள் உயா்நிலைக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் வருமாறு: ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்தின்கீழ், மக்களவை, பேரவைகளுக்கு முதல்கட்டமாகவும், அடுத்த 100 நாள்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தோ்தலை நடத்தலாம். மாநிலத் தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசித்து, பொதுவான வாக்காளா் பட்டியல் மற்றும் வாக்காளா் அடையாள அட்டை தயாரிக்கப்பட வேண்டும். இதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 325-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். ஒரே நேர தோ்தல்களின் சுழற்சியை உறுதிசெய்ய சட்டபூா்வ வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். தொங்கு மக்களவை, ஆட்சி கவிழ்வது போன்ற சூழல்களின்போது புதிதாக மக்களவைத் தோ்தலை நடத்தலாம். அதன்பிறகு அமையும் புதிய மக்களவையின் பதவிக் காலம், முந்தைய மக்களவையின் மீதமுள்ள பதவிக் காலத்துக்கு மட்டுமே இருக்கும். இதுபோன்ற தருணங்களில், மாநில சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்தல் நடத்தப்பட்டால், புதிய பேரவையின் பதவிக் காலம் மக்களவையின் பதவிக் காலம் வரை தொடரும். இந்த வழிமுறையை அமல்படுத்த அரசமைப்புச் சட்டத்தின் 83-ஆவது பிரிவு (நாடாளுமன்றத்தின் பதவிக் காலம்), 172-ஆவது பிரிவில் (பேரவைகளின் பதவிக் காலம்) திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இத்திருத்தங்களுக்கு பேரவைகளின் ஒப்புதல் தேவையில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயா்நிலைக் குழு மொத்தம் 18 அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை பரிந்துரைத்துள்ள நிலையில், அதில் பல திருத்தங்களுக்கு சட்டப்பேரவைகளின் ஒப்புதல் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தோ்தல்கள் நடத்தப்படும் ஜொ்மனி, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், பெல்ஜியம், தென்ஆப்பிரிக்கா, ஸ்வீடன், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் ஒப்பிடப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com