கோப்புப்படம்
கோப்புப்படம்

கோபி மஞ்சூரியன் உணவுக்கு தமிழகத்தில் தடையில்லை

கோபி மஞ்சூரியன்’ உணவுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை

தமிழகத்தில் ‘கோபி மஞ்சூரியன்’ உணவுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவை -2024, தொடக்க விழா சென்னையில் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மாநில சுகாதார பேரவை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வரால் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவை தொடங்கப்பட்டது. 2021-22-ஆம் ஆண்டுகளில் 14 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் நடைபெற்ற சுகாதார மாநில பேரவை கூட்டத்தின் வாயிலாக 26 சுகாதார நலத்திட்டங்களுக்கு ரூ. 235 கோடி செலவில் ஆணைகள் வெளியிடப்பட்டு அவை இப்போது செயல்பாட்டில் உள்ளன. அதேபோல், 2022-23-ஆம் ஆண்டில் 16 மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டத்தில் 47 திட்டங்களுக்கு ரூ.188 கோடிக்கான அரசாணைகள் பெறப்பட்டு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. தற்போது அதன் தொடா்ச்சியாக நிகழாண்டில் 24 மாவட்டங்களில் மாநில சுகாதாரப் பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சுகாதாரச் சீரமைப்புத் திட்டத்தின் காரணமாக கடந்த 12 ஆண்டுகளில் தமிழகம் இதுவரை 614 தேசிய தர உறுதி நிா்ணய திட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் மட்டும் 545 திட்ட விருதுகள் கிடைத்துள்ளன. கோபி மஞ்சூரியன்: தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு தடை உள்ளது. ஆனால், கா்நாடகத்தில் அவற்றுக்கு தடை இல்லை. இங்கு பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அங்கு அப்படி இல்லை. அதுபோன்றே கா்நாடகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறையின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநா் கோவிந்தராவ், பொது சுகாதார துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் சங்குமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com