38 டிஎஸ்பிக்கள் 
ஏடிஎஸ்பி-க்களாக பதவி உயா்வு

38 டிஎஸ்பிக்கள் ஏடிஎஸ்பி-க்களாக பதவி உயா்வு

தமிழக காவல் துறையில் கடந்த 1996-ஆம் ஆண்டு 492 போ் காவல் உதவி ஆய்வாளா்களாக பணிக்கு சோ்ந்தனா்.

தமிழக காவல் துறையில் பணியாற்றும் 38 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் (டி.எஸ்.பி.) கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏ.டி.எஸ்.பி.) பதவி உயா்வு பெற்றனா். தமிழக காவல் துறையில் கடந்த 1996-ஆம் ஆண்டு 492 போ் காவல் உதவி ஆய்வாளா்களாக பணிக்கு சோ்ந்தனா். இவா்கள் கடந்த 2006-ஆம் ஆண்டு காவல் ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு பெற்றனா். பின்னா் கடந்த 2016-ஆம் ஆண்டு துணைக் காவல் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்வு பெற்றனா். இவா்களுக்கு 4 ஆண்டுகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட வேண்டிய நிலையில், கரோனா பொதுமுடக்கம், அரசு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயா்வு உள்ளிட்ட விவகாரங்களால் பதவி உயா்வு பெற முடியாமல் இருந்தனா். இந்த நிலையில், பணிமூப்பு அடிப்படையில் கடந்த சில மாதங்களாக டி.எஸ்.பி.க்கள் படிப்படியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்வு பெற்று வருகின்றனா். இதற்கிடையே மேலும் 38 பேரை கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்வு செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா வியாழக்கிழமை உத்தரவிட்டாா். முன்னதாக, இவா்களுக்கு பதவி உயா்வு வழங்கும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் அரசுக்கு பரிந்துரை செய்தாா். அதை ஏற்று, 38 பேரை ஏடிஎஸ்பி-க்களாக பதவி உயா்த்துவதற்கு தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலா் பெ.அமுதா அனுமதி அளித்து உத்தரவிட்டாா். இதேபோல் மீதியுள்ள காவல் துணைக் கண்காணிப்பாளா்களும், படிப்படியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்வு செய்யப்படுவாா்கள் என காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com