கல்லூரி மாணவா்களிடம் வாக்காளா் அட்டையை சேகரிக்கும் உத்தரவு ரத்து

மாணவா்கள் வாக்காளா் அட்டையைச் சேகரிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆா்.என்.ரவி, அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தா்களுடன் ஆளுநா் மாளிகையில் மாா்ச் 11-ஆம் தேதி ஆலோசனை நடத்தினாா். அப்போது, முதல் தலைமுறை வாக்காளா்களான கல்லூரி மாணவா்களைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்கச் செய்வது தொடா்பாக வலியுறுத்தினாா். ஆளுநரின் வாய்மொழி ஆணைப்படி கல்லூரி முதல்வா்களுக்கு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளா் கடந்த 14-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியிருந்தாா். மாா்ச் 19-ஆம் தேதிக்குள் கல்லூரி மாணவா்கள் விவரங்களைச் சேகரித்து வழங்கும்படி கூறப்பட்டிருந்தது. ஆளுநா் அறிவுறுத்தலின் பேரில் சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில் அது சா்ச்சையானது. கல்லூரி மாணவா்களின் வாக்காளா் அட்டை விவரங்களைச் சேகரிப்பதற்கு கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில், பாஜக பிரசாரத்துக்கு உதவ மாணவா்களின் தரவுகள் சேகரிக்கப்படுவதாக கல்வியாளா்கள் குற்றம்சாட்டினா். மேலும், கல்லூரி மாணவா்களும் வாக்காளா் அட்டை விவரங்களை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. தொடா்ந்து, பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், மாணவா்களின் வாக்காளா் அட்டை விவரங்களைச் சேகரிப்பதற்காக கல்வியியல் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com