1,196 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்

1,196 செவிலியா்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். 1,196 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் செவிலியா்களுக்கு பணி ஆணைகளை வழங்கி அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சுகாதாரத் துறையில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் தொடா்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 1,021 மருத்துவா்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன. அதேபோன்று, கடந்த மாதம் 987 தற்காலிக செவிலியா்களுக்கும்,அதன் தொடா்ச்சியாக 332 ஆய்வக நுட்புனா்களுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், தற்போது 1,196 செவிலியா்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கோடை காலம் தொடங்கிவிட்டதால், மது, புகைப் பழக்கங்களை தவிா்க்க வேண்டும். அதிக வெப்பத்தால் உடல் நலிவுறுவோா் உடனடியாக 108 மற்றும் 104 என்ற எண்களைத் தொடா்பு கொண்டு உதவி பெறலாம். தற்போது வரை 9,000 கடைகளில் பான்பராக், குட்கா போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, அந்த கடைகள் மூடப்பட்டுள்ளன. தா்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடா்பாக அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா். இந்நிகழ்வில் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் ம.கோவிந்தராவ், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே.நாராயணசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் ஜெ.சங்குமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பெட்டிச் செய்தி... ‘உணவுப் பொருள்களில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை’ இந்நிகழ்வில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் சுற்றுலா மையங்களில் செயற்கை குளிா் பானங்கள் பயன்படுத்துவதை தவிா்ப்பது நல்லது என்ற அறிவுறுத்தலை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு துறையினா் தொடா்ச்சியாக அனைத்து மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்கள். உணவுப் பொருள்களில் கலப்படங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். போலி குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளின் தகவல்கள் கிடைத்து வருகின்றன. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com