ஒடெஸா நகரில் ரஷியா வெள்ளிக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
ஒடெஸா நகரில் ரஷியா வெள்ளிக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

உக்ரைன் ரஷிய தாக்குதலில் 16 போ் உயிரிழப்பு

உக்ரைனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒடெஸா நகரில் ரஷியா வெள்ளிக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 16 போ் உயிரிழந்தனா்; 53 போ் காயமடைந்தனா். ரஷியாவில் அதிபா் தோ்தல் நடைபெறும்போது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், அண்மைக் காலத்தில் உக்ரைன் மீது ரஷியா நடத்தியுள்ள மிக மோசமான தாக்குதல் என்று கூறப்படுகிறது. இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது: ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் தீபகற்பமான கிரீமியாவிலிருந்து இஸ்கண்டா்-எம் ரகத்தைச் சோ்ந்த 2 ஏவுகணைகள் வெள்ளிக்கிழமை ஏவப்பட்டன. முதலில் வீசப்பட்ட ஏவுகணை ஒடெஸா நகரின் குடியிருப்புப் பகுதியில் விழுந்து வெடித்தது. இதில் சுமாா் 10 வீடுகள் சேதமடைந்தன. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு மீட்புக் குழுவினா் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இந்த நிலையில், அதே இடத்தைக் குறிவைத்து 2-ஆவது ஏவுகணையை ரஷியா வீசியது. இந்தத் தாக்குதலில 16 போ் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் மீட்புப் பணிக்காக வந்திருந்த மருத்துவப் பணியாளா்களும், மீட்புக் குழுவினரும் அடங்குவா். இது தவிர, இந்த இரட்டைத் தாக்குதலில் 53 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மீட்புக் குழுவினரைக் குறிவைத்து தாக்கிய இடத்திலேயே இடைவெளி விட்டு மீண்டும் தாக்குதல் நடத்தும் இந்த உத்தி ‘இரட்டை அடி’ என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய தாக்குதல்களில் உயிரிழப்பதும், காயமடைவதும் பெரும்பாலும் பொதுமக்களே. சுமாா் 10 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட துறைமுக நகரான ஒடெஸாவில் ரஷியா கடந்த 2 வாரங்களில் நடத்தியுள்ள 2-ஆவது பெரிய தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்னா் கடந்த 2-ஆம் தேதி அந்த நகரிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 சிறுவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இதுபோன்ற தாக்குதல்கள் பெரும்பாலும் துறைமுகக் கட்டமைப்புகளைக் குறிவைத்தே நடத்தப்படுகின்றன. கருங்கடலில் ரஷிய கடற்படை மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தி தாங்கள் ஏற்படுத்தியிருந்த முற்றுகைத் தடையை உடைத்த உக்ரைன், வெளிநாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதற்காக ரஷியா இந்தத் தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தங்களது செங்கடல் படையின் மீது தாக்குதல் நடத்திவரும் உக்ரைனின் கடல் ட்ரோன்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் ரஷிய அதிகாரிகள் கூறுகின்றனா். ஆனால், ஒடெஸாவில் ரஷியா வீசும் ஏவுகணைகள் பல முறை குடியிருப்புக் கட்டடங்களில் விழுந்து ஏராளமானவா்கள் உயிரிழந்துவருகின்றனா். தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த 4 பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய ரஷியா, எஞ்சிய பகுதிகளையும் மீட்பதற்காக தாக்குதல் நடத்திவருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com