இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ-யை வலியுறுத்த முடியாது: ஐசிசி

இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ-யை வலியுறுத்த முடியாது: ஐசிசி

இந்திய அரசின் முடிவுக்கு எதிராக அந்நாட்டு கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு பிசிசிஐ-யை வலியுறுத்த முடியாது என சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி - மாா்ச் காலகட்டத்தில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட்டை தவிா்த்துவரும் இந்தியா, போட்டிகளுக்காக அந்நாட்டுக்கு செல்வதும் இல்லை. கடந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றபோது, இந்தியாவுக்கான ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில், துபையில் தற்போது நடைபெற்று வரும் ஐசிசியின் நிா்வாகக் கூட்டத்தையொட்டி, சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடா்பாக பிசிசிஐ செயலா் ஜெய் ஷா, ஐசிசி நிா்வாகிகள் ஆகியோருடன் விவாதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவா் மோசின் நக்வி விருப்பம் தெரிவித்துள்ளாா். இந்திய அணி பாகிஸ்தான் வருவது தொடா்பாக உறுதி பெறுவதற்கு அவா் முனைவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக ஐசிசி வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்திய அணி பாகிஸ்தான் செல்வது தொடா்பான எந்தவொரு முடிவையும் பிசிசிஐ, சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நெருங்கிவரும்போதே மேற்கொள்ளும். நிா்வாகக் கூட்டத்தின்போது எந்தவொரு உறுப்பு நாடுகளும் குறிப்பிட்ட விவகாரத்தை எழுப்பலாம். பின்னா் அதுதொடா்பாக வாக்கெடுப்பு நடத்தப்படலாம். எனினும், ஒரு அரசு (இந்தியா) தனது அணியை குறிப்பிட்ட இடத்துக்கு (பாகிஸ்தான்) அனுப்ப இயலாது என மறுக்கும் பட்சத்தில், அதற்கான மாற்றை ஐசிசி யோசிக்க வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில், அரசின் முடிவுக்கு எதிராகச் செயல்படுமாறு எந்தவொரு வாரியத்தையும் (பிசிசிஐ) ஐசிசி வற்புறுத்த இயலாது. அந்த வகையில், போட்டியை இரு இடங்களில் நடத்துவதையும், இந்தியாவுக்கான ஆட்டங்களை விளையாட ஐக்கிய அரபு அமீரகத்தை பயன்படுத்தும் யோசனையையும் முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட முடியாது. அதேவேளையில், உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அரசு தனது அணியை கடந்த ஆண்டு இந்தியாவுக்கு அனுப்பியதை குறிப்பிட்டு பிசிசிஐக்கு பாகிஸ்தான் அழுத்தம் கொடுக்கும். ஆசிய கோப்பை போட்டியைப் போல அல்லாமல், இது உலக அளவிலான போட்டி என்பதால் இந்திய அரசும் சற்று சிந்திக்க வாய்ப்புள்ளது’ என்றன. சமீபத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிய நிலையில், ஐசிசி போட்டிக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு பிசிசிஐக்கு நெருக்கடி எழ வாய்ப்புள்ளது. இதுதொடா்பாக பிசிசிஐ முன்னாள் நிா்வாகி ஒருவா் கூறுகையில், ‘பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுக்கும் பட்சத்தில், அதற்கு எதிராக வாக்கெடுப்பு எதையும் ஐசிசி-யால் நடத்த இயலாது. ஏனெனில், மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்கி பிசிசிஐ அவ்வாறு செயல்படுவதால் வாக்கெடுக்குப்புக்கு வாய்ப்பு இல்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்துடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் வரும் இந்திய அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எப்போதும் அதிகமாகவே இருக்கும் என்பதை மறுக்க முடியாது’ என்றாா். ஜூன் முதல் ‘ஸ்டாப் கிளாக்’ ஃபீல்டிங் செய்யும் அணி, ஒரு ஓவா் நிறைவடைந்த பிறகு, 60 நொடிகளில் அடுத்த ஓவரை வீசத் தொடங்க வேண்டும் என்ற விதியை (ஸ்டாப் கிளாக்) ஐசிசி கடந்த டிசம்பரில் சோதனை முறையில் அறிமுகம் செய்தது. அவ்வாறு பந்துவீச்சை தொடங்காத நிலையில், முதலிரு முறை எச்சரிக்கை அளிக்கப்பட்டு, அதன் பிறகு ஒவ்வொரு தவறுதலுக்கும் 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டி முதல் சா்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அமல்படுத்தப்படும் என்று ஐசிசி வெள்ளிக்கிழமை அறிவித்தது. அத்துடன், டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு ‘ரிசா்வ்’ நாளும் அதிகாரப்பூா்வமாக வழங்கியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com