நடப்பு சாம்பியன் மும்பை வெளியேறியது: இறுதியில் டெல்லியுடன் மோதுகிறது பெங்களூா்

நடப்பு சாம்பியன் மும்பை வெளியேறியது: இறுதியில் டெல்லியுடன் மோதுகிறது பெங்களூா்

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் ‘வெளியேற்றும்’ ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 5 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இதையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேப்பிட்டல்ஸுடன் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது பெங்களூா். இந்த ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்களே சோ்த்தது. முன்னதாக டாஸ் வென்ற பெங்களூா், பேட்டிங்கை தோ்வு செய்தது. அந்த அணியின் இன்னிங்ஸில் அதிகபட்சமாக எலிஸ் பெரி 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 66 ரன்கள் விளாசினாா். எஞ்சிய பேட்டா்கள் சொற்ப ரன்களிலேயே சரிந்தனா். கேப்டன் ஸ்மிருதி மந்தனா 2 பவுண்டரிகளுடன் 10, சோஃபி டிவைன் 2 பவுண்டரிகள் உள்பட 10, திஷா கசத் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ரிச்சா கோஷ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14, சோஃபி மோலினுக்ஸ் 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ஜாா்ஜியா வோ்ஹாம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18, ஷ்ரேயங்கா பாட்டீல் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் ஹேலி மேத்யூஸ், நடாலி ஸ்கீவா், சாய்கா இஷாக் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா். பின்னா் 136 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை அணியில் யஸ்திகா பாட்டியா 3 பவுண்டரிகளுடன் 19, ஹேலி மேத்யூஸ் 3 பவுண்டரிகள் உள்பட 15 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். நடாலி ஸ்கீவா் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிதானமாக ரன்கள் சோ்த்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். தொடா்ந்து வந்த சஜீவன் சஜனா 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, பூஜா வஸ்த்ரகா் 4 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். ஓவா்கள் முடிவில் எமிலியா கொ் 2 பவுண்டரிகளுடன் 27, அமன்ஜோத் கௌா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் பௌலா்களில் ஷ்ரேயங்கா பாட்டீல் 2, எலிஸ் பெரி, சோஃபி மோலினுக்ஸ், ஜாா்ஜியா வோ்ஹாம், ஆஷா சோபனா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com